Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/முயற்சி தேவை!

முயற்சி தேவை!

முயற்சி தேவை!

முயற்சி தேவை!

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
ஆசிரமத்தில் இருக்கும் சாமியார் ஒருவர், தினமும் நல்ல போதனைகளை செய்வார். பல பேர், ஆசிரமத்திலேயே சிலநாள் தங்கியிருந்து, அவர் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு செல்வது வழக்கம்.

ஒருசமயம், அந்த மடத்திலேயே தங்கியிருந்து, அவருடைய போதனைகளை கேட்பதற்காக, வெளியூர் தம்பதியர் மூவர் வந்தனர்.

காலையிலேயே குளித்து பூஜையில் உட்கார்ந்தார், சாமியார். இவர்களும் குளித்துவிட்டு, அவர் முன் உட்கார்ந்தனர்.

பூஜை ஆரம்பித்து, நீண்ட நேரம் நடந்தது. அதிக பசியுடன் இருந்த இவர்கள், அதை வெளிக்காட்டாமல், அமைதியாக இருந்தனர்.

பூஜையை முடித்த சாமியார், பேச ஆரம்பித்தார். பேச்சு அருமையாக, அமிர்தமாக இருந்தாலும், வயிற்றுப்பசியால் இவர்களால் சரியாக கவனிக்க முடியவில்லை.

உள்ளே சாப்பாடு தயாராகி இருக்கும். பேச்சு முடிந்து சாமியார் அழைத்து போவார் என்ற நினைப்பில் இருந்தனர்.

ஆனால், எதையும் கண்டுக்கவில்லை, சாமியார்.

அதற்கு மேல் தாங்காமல், 'சாப்பாட்டை கவனிக்கலாமா?' என, கேட்டார், ஒரு அம்மா.

'ஓ கவனிக்கலாமே...' என்று, உள்ளே அழைத்து போனார், சாமியார். அங்கிருந்த மேஜை மேல், ஒரு கிண்ணம் இருந்தது.

'ஓ, இது தான் சாப்பாட்டு மேஜை போல இருக்கு. இங்கே சாப்பாடு வந்துடும்...' என, நினைத்து, சுற்றி உட்கார்ந்தனர்.

அங்கிருந்த கிண்ணத்தை எடுத்து, அந்த அம்மாவிடம் கொடுத்தார், சாமியார். அதை திறந்து பார்க்க, உள்ளே ஒரு சாவி இருந்தது.

'இது சமையலறைச் சாவியா இருக்கும். அங்கே போய் திறந்து, சாப்பாட்டை நாமே எடுத்து வந்து இங்கே வைத்து சாப்பிடணும் போல...' என நினைத்தார், அந்த அம்மா.

'சாவி இருக்கு இல்லையா? வாங்க, பூட்டின அறையைக் காட்டறேன்...' என, அவர்களை அழைத்து போனார், சாமியார்.

அந்த அறையை மிகுந்த ஆவலுடன் திறக்க, உள்ளே, சமையலுக்கு வேண்டிய அனைத்தும் இருந்தன.

சாப்பாடு தயாராக இருக்கும் என, நினைத்தவர்கள், இதை பார்த்ததும் சோர்ந்து போயினர்.

'என்ன இது. சாப்பாடு இல்லையா?' என்றனர்.

'அது தான் சாப்பாட்டுக்கு வேண்டிய எல்லாம் இங்கே இருக்கே. அடுப்பு மூட்டி, நீங்க தான் அவங்க அவங்க ருசிக்குத் தகுந்த மாதிரி சமைச்சிக்கணும். இந்த சந்நியாசிக்கு எப்படி சமைக்கத் தெரியும்?' என்றார், சாமியார்.

'சாப்பாடு தயாரா இருக்கும்ன்னு நாங்க எதிர்பார்த்தோம்...' என்றனர், இவர்கள்.

'நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு, நானும் எதிர்பார்த்தேன். இதுவரைக்கும் நான் எவ்வளவோ தத்துவத்தை எடுத்து சொன்னேன். எல்லாத்தையும் விட இதுதான் அனுபவ பூர்வமான தத்துவம். ஆண்டவன் நமக்கு நல்ல மனதை கொடுத்திருக்கிறான்; நல்ல வாய்ப்புகளையும் தந்திருக்கிறான்.

'அதையெல்லாம் பயன்படுத்திக்க கூடிய மூளையையும் கொடுத்திருக்கிறான். ஆனாலும், அடுப்பை நீங்க தான் மூட்டணும். உங்களுக்கு உகந்ததை நீங்க தான் சமைச்சு ருசிச்சு அனுபவிக்கணும். ஆண்டவன் அதைச் செய்ய மாட்டான்...' என்றார், சாமியார்.

நம்முடைய வாழ்க்கையிலே நல்ல பலன்களைப் பெற, நாம் தான் முயற்சி செய்யணும். அதற்குரிய சூழ்நிலையை, கொடுப்பான், ஆண்டவன்.

பி. என். பி.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us