Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பண்பாடு!

பண்பாடு!

பண்பாடு!

பண்பாடு!

PUBLISHED ON : ஜூன் 14, 2025


Google News
Latest Tamil News
சென்னை, ஐ.சி.எப்.உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 10ம் வகுப்புப் படித்தபோது நடந்த சம்பவம்...

குடும்பத்தில் பிரபல வார இதழ்களை தவறாது வாங்குவர். அவற்றை படித்ததால் கதை, கட்டுரை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அவ்வப்போது எதையாவது எழுதிய போதிலும், 'படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறானோ' என, அப்பாவின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் தயங்கி மறைத்து வைத்திருந்தேன்.

ஒருநாள் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாமல் சிறுகதை ஒன்றை, 'ஆனந்த விகடன்' இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதில், அனுப்புகை முகவரியில் பள்ளியை குறிப்பிட்டிருந்தேன். பிரசுரமாகும் என எதிர் பார்த்து ஒவ்வொரு நாளையும் ஆவலுடன் கடத்தி வந்தேன்.

அன்று காலை பள்ளிக்கு வந்தவுடன், கணித ஆசிரியர் ஆராவமுதன் அழைத்தார். ஒரு தபால் கவரை காட்டி, 'பிரசுரத்துக்கு ஏற்றதாக இல்லை என பத்திரிகை அலுவலகம் உன் கதையை திருப்பி அனுப்பியுள்ளது...' என்று சொல்லியபடி கொடுத்தார்.

என் செயலை கேலி செய்வாரோ என எண்ணியபடி அவர் முகத்தை பார்த்தேன். எதிர்பாராத வகையில், 'உன் படைப்பு திரும்பி வந்ததற்காக கவலைப்படாதே... பிரபல பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும் என துணிச்சலாக நீ எடுத்திருந்த முடிவே பாராட்டத் தக்கது. மனம் தளராமல் முயற்சி செய்... எழுதுவதை நிறுத்தி விடாதே... அதே நேரம், படிப்பிலும் கோட்டை விட்டுவிடாதே...' என்று அறிவுறுத்தினார். அவர் மீதான மதிப்பு உயர்ந்தது.

அத்துடன் நிறுத்தாமல் என் வீட்டுக்கு வந்து அப்பாவை சந்தித்து, 'படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான். கூடவே, கதை, கட்டுரைகள் எழுதும் ஆர்வமும் உள்ளது. அதை தொடர அனுமதியுங்கள். ஒருபோதும் தடுக்க வேண்டாம்...' என கேட்டுக் கொண்டார் கணித ஆசிரியர். அது பெரும் உற்சாகம் தந்தது.

எனக்கு, 77 வயதாகிறது. பிரபல பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பிரபு சங்கர் என்ற புனைப்பெயரில் இப்போதும் கட்டுரைகள் எழுதிவருகிறேன். இது போன்ற உயர்வுகள், பள்ளியில் என் கணித ஆசிரியர் ஆராவமுதன் மேலான ஊக்குவிப்பால் கிடைத்ததாகவே நம்புகிறேன். அவரது பொற்பாதங்களை பணிந்து வணங்கி வாழ்கிறேன்.

-- ஆர்.முத்துஸ்வாமி, சென்னை.

தொடர்புக்கு: 72999 68695






      Our Apps Available On




      Dinamalar

      Follow us