/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தி.மு.க.,வில் தொகுதிக்கு ஆறு வேட்பாளர் பட்டியல் தயார்! தி.மு.க.,வில் தொகுதிக்கு ஆறு வேட்பாளர் பட்டியல் தயார்!
தி.மு.க.,வில் தொகுதிக்கு ஆறு வேட்பாளர் பட்டியல் தயார்!
தி.மு.க.,வில் தொகுதிக்கு ஆறு வேட்பாளர் பட்டியல் தயார்!
தி.மு.க.,வில் தொகுதிக்கு ஆறு வேட்பாளர் பட்டியல் தயார்!
PUBLISHED ON : மே 23, 2025 12:00 AM

''சங்கம் விட்டு சங்கம் தாவுறாங்க...'' என்றபடியே, இஞ்சிடீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சி பகுதிகள்ல, குப்பை அள்ளும் பணிக்கான புதிய நிறுவனத்தின் கான்ட்ராக்ட், கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்துச்சு... அடுத்த வாரமே, தினக்கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் திடீர்னு வேலைநிறுத்த போராட்டம் துவங்கினாங்க...
''சாயந்தரமா, மாநகராட்சி கமிஷனர் தலைமை யில பேச்சு நடத்திய துாய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள், 'தினக்கூலியை உயர்த்தித் தர ஒப்புக்கிட்டாங்க'ன்னு சொல்லவே, பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டாங்க... ஆனா, தினக்கூலி உயர்வு சம்பந்தமா மாநகராட்சியில இருந்து எந்த அறிவிப்பும் வரலைங்க...
''இதனால, ஆளுங்கட்சி ஆதரவு சங்க நிர்வாகிகள் மீது கடுப்பான துாய்மை பணியாளர்கள், இப்ப ஆளுங்கட்சிக்கு எதிரான சங்கத்துக்கு தாவிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஜெயகுமாருக்கு ராஜ்யசபா, 'சீட்' கேட்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''வர்ற ஜூன் மாசம், தமிழகத்துல ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு தேர்தல் நடக்க போகுது... இதுல, தி.மு.க.,வுக்கு நாலு, அ.தி.மு.க.,வுக்கு ரெண்டு எம்.பி.,க்கள் கிடைப்பாங்க பா...
''போன சட்டசபை தேர்தல்ல தோல்வி அடைந்த, 'மாஜி' அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர், 2022ல் நடந்த ராஜ்யசபா தேர்தலப்பவே எம்.பி., பதவி எதிர்பார்த்தாங்க... ஆனா அப்ப, சண்முகத்துக்கும், பன்னீர்செல்வம் ஆதரவாளரான ராமநாதபுரம் தர்மருக்கும், எம்.பி., பதவிகள் போயிடுச்சு பா...
''இதனால, 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எண்ணத்தை பிரதி பலிக்கும் வகையில, ஊடகங்களிடம் ஜெயகுமார் தான் பேசுறாரு... எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் பதிலடி தர்றாரு... எல்லாத்துக்கும் மேலா, மறைந்த எழுத்தாளர் வலம்புரி ஜானுக்கு பிறகு, அ.தி.மு.க.,வுல மீனவர் சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கல... அந்த வகையில, ஜெயகுமாருக்கு எம்.பி., பதவி தரணும்'னு மீனவர் சங்க நிர்வாகிகள் எல்லாம், அ.தி.மு.க., தலைமைக்கு கோரிக்கை வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தொகுதிக்கு ஆறு பேர் பட்டியல் தயாரிச்சிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த கட்சியில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சட்டசபை தேர்தலுக்கான பணிகளை, தி.மு.க., துவங்கிட்டுல்லா... மண்டல பொறுப்பாளர் களை நியமிச்சு, மாவட்ட வாரியா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்திட்டு இருக்காவ வே...
''பூத் கமிட்டி குழுவினர் செயல்பாடுகள் குறித்து, கட்சி தலைமை அடிக்கடி விபரங்கள் சேகரிச்சுட்டு இருக்கு... அவங்களது செயல்பாடுகளையும் உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கு வே...
''இன்னொரு பக்கம், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வேட்பாளர் தகுதியுள்ள ஆறு பேரை பட்டியல் எடுத்து வச்சிருக்காவ... இதுல இருந்து ஒருத்தருக்கு வாய்ப்பு தருவாவளாம்... இந்த ஆறு பேர்ல நாம இருக்கோமான்னு தெரிஞ்சுக்க, கட்சி நிர்வாகிகள் பலரும் முட்டி மோதிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.