/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ போராட தயாராகும் ரேஷன் கடை ஊழியர்கள்! போராட தயாராகும் ரேஷன் கடை ஊழியர்கள்!
போராட தயாராகும் ரேஷன் கடை ஊழியர்கள்!
போராட தயாராகும் ரேஷன் கடை ஊழியர்கள்!
போராட தயாராகும் ரேஷன் கடை ஊழியர்கள்!
PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''தொழிலாளர்களை ஏமாத்துறாங்க பா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில், 19 வகையான தொழிலாளர் நல வாரியங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை நடக்குது... இதுல, வடமாநில தொழிலாளர்களையும் சேர்க்கிறாங்க பா...
''வடமாநில தொழிலாளர்கள், இந்த அலுவலக ஊழியர்களிடம் வந்து விபரம் கேட்டா, அவங்களை சில அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளை போய் பாருங்கன்னு அனுப்பிடுறாங்க... அந்த தொழிற்சங்க புள்ளிகளோ, தொழிலாளர்களிடம் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை கறந்துட்டு, உறுப்பினர்களா சேர்க்கிறாங்க பா...
''இதுக்குன்னே சில புரோக்கர்களும் இருக்காங்க... இதுல, உதவி ஆணையர் அலுவலக ஊழியர்களுக்கும் பங்கு குடுத்துடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அடுத்த டி.ஜி.பி., நான் தான்னு, 'போட்டோ ஷூட்' நடத்தியிருக்காரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக டி.ஜி.பி.,யா இருக்கிற சங்கர் ஜிவால், வர்ற ஆகஸ்ட் 31ல, 'ரிட்டயர் ஆக இருக்காரு... அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் வர்றதால, புது டி.ஜி.பி.,யை நியமிக்கிறதுக்கு பதிலா, சங்கர் ஜிவாலுக்கே ஆறு மாசம் அல்லது ஒரு வருஷம் பதவி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருக்கிறதா தகவல்கள் வெளியாச்சு வே...
''பதவி நீட்டிப்புக்கு உள்துறை மற்றும் தலைமை செயலர் வழியா, மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பணும்... ஆனா, அப்படி எந்த காரியமும் நடக்கல... சங்கர் ஜிவாலின் விருப்பத்தை யும் அரசு தரப்புல கேட்கல வே...
''இதனால, 'சங்கர் ஜிவால் பதவி நீட்டிப்பு எல்லாம் வதந்தி... அடுத்த டி.ஜி.பி., நான் தான்'னு சொல்ற மூத்த அதிகாரி ஒருத்தர், மீடியாக்களுக்கு தர்றதுக்காக, சமீபத்துல, 'போட்டோ ஷூட்' நடத்தி இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''வாங்க சந்தீப், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அந்தோணிசாமியே, ''போராட்டத்துக்கு தயாராகிட்டு இருக்காங்க...'' என்றார்.
''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தமிழகத்துல, கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடைகளை நடத்துறாங்க... ரேஷன் கார்டுகள் வழங்குறது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை கொள்முதல் செய்றது ஆகிய பணிகளை உணவுத் துறை செய்யுதுங்க...
''அதே நேரம், ரேஷன் கடைகள்ல உணவு, கூட்டுறவு, வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்னு பலரும் ஆய்வுக்கு போறாங்க... இவங்கள்ல பலரும், ரேஷன் ஊழியர்களை மிரட்டி பணம் வசூலிக்கிறாங்க...
''இதனால, 'பொது வினியோகத்துக்கு தனி துறையை உருவாக்கணும்'னு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வச்சுட்டு இருக்காங்க... கடந்த சட்டசபை தேர்தலப்ப, 'நாங்க ஆட்சிக்கு வந்தா, பொது வினியோகத்துக்கு தனி துறை உருவாக்கப்படும்'னு, தி.மு.க.,வினரும் வாக்குறுதி தந்திருந்தாங்க...
''ஆனா, ஆட்சிக்கு வந்து நாலு வருஷம் முடிஞ்சும், வாக்குறுதியை கண்டுக்கல... இதனால, ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் எல்லாம் சேர்த்து, அரசுக்கு எதிரா போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.