/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மணல் மாமூலுக்கு மல்லுக்கட்டும் சீனியர் - ஜூனியர் போலீசார்! மணல் மாமூலுக்கு மல்லுக்கட்டும் சீனியர் - ஜூனியர் போலீசார்!
மணல் மாமூலுக்கு மல்லுக்கட்டும் சீனியர் - ஜூனியர் போலீசார்!
மணல் மாமூலுக்கு மல்லுக்கட்டும் சீனியர் - ஜூனியர் போலீசார்!
மணல் மாமூலுக்கு மல்லுக்கட்டும் சீனியர் - ஜூனியர் போலீசார்!
PUBLISHED ON : ஜூன் 21, 2024 12:00 AM

''பொள்ளாச்சி தி.மு.க., புகைச்சலை கேளுங்க...'' என, முதல் ஆளாக அரட்டையை துவங்கிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பொள்ளாச்சி தொகுதி லோக்சபா தேர்தலில், நகர்ப்புறங்கள்ல சில பூத்கள்ல தி.மு.க., - அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., தரப்பு ஓட்டுகளை அள்ளிடுச்சுங்க... இந்த சூழல்ல, அதிக ஓட்டுகள் பெற்று தந்த வார்டு நிர்வாகிகளுக்கு மோதிரம் வழங்க போறதா, நகர தி.மு.க., சார்புல அறிவிச்சாங்க...
''தேர்தலுக்கு முன்னாடி, வார்டு செயலர், கவுன்சிலர், பூத் பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்னு அறிவிச்சாங்க... ஆனா, இப்ப ரெண்டு வார்டுகளுக்கு மட்டும் தான் மோதிரம் குடுத்திருக்காங்க...
''அதுலயும், பூத் வாரியா ஓட்டுகளை கணக்கு போடாம, சதவீத கணக்கு பார்த்து மோதிரம் குடுத்திருக்காங்கன்னு, கட்சியின், 'வாட்ஸாப்' குழுக்கள்ல பலரும் மனக்குமுறல்களை கொட்டிட்டு இருக்காங்க...
''தி.மு.க., முக்கிய புள்ளியின் வார்டுலயே ரெண்டு பூத்கள்ல பா.ஜ., முன்னிலைக்கு வந்ததை மறைக்கவே, மோதிரம் போட்டு மூடி மறைக்கிறார்னும் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நவநீதகிருஷ்ணன், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு நகர்ந்து வழிவிட்ட அன்வர்பாய், ''மாமூல் மழையில குளிக்கிறாரு பா...'' என்றார்.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தாம்பரம் கமிஷனரகம், கூடுவாஞ்சேரியில், ஐ.எஸ்., உளவுப்பிரிவு போலீசா ஒருத்தர் இருக்காரு... போன வருஷம், மறைமலைநகர் ஐ.எஸ்.,ல இருந்தப்ப, 'ஜி பே'யில லஞ்சம் வாங்கி, மாற்றப்பட்டாரு பா...
''உயர் அதிகாரிகள் நெருக்கத்தை பயன்படுத்தி, கூடுவாஞ்சேரி ஐ.எஸ்., பிரிவுக்கு வந்துட்டாரு... இங்க, டாஸ்மாக் பார்கள், மசாஜ் சென்டர்கள், காயரமேடு பகுதியில், 'குட்கா' தயாரிக்க புகையிலை அரைக்கும் குடோன்ல மாதாந்திர மாமூல் வசூலிக்காரு... மாமூல் பணத்துல சமீபத்துல புது காரும் வாங்கிட்டாரு பா...
''இவருக்கு துறை அதிகாரி ஒருத்தர் உடந்தையா இருக்காரு... இவங்க ரெண்டு பேரும், பிரபல ரவுடிகளிடம் மூணு, 'ஏசி'க்களை வாங்கி, கமிஷனர் ஆபீஸ்ல இருக்கிற தங்களது துறையில மாட்டியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி கொள்ளிடம் ஆற்றில் மூணு புள்ளிகள், தனித்தனியே மணல் கடத்தலில் ஈடுபடறா... இவாளிடம், கொள்ளிடம் ஸ்டேஷனில் பணியாற்றும் சீனியர் போலீசார் மாமூல் வாங்கறா ஓய்...
''இதே ஸ்டேஷனில் பணியாற்றும் ஜூனியர் போலீசார், தனியா மாமூல் வசூலிக்க கிளம்பிட்டா... இதனால, சீனியர்கள் - ஜூனியர்கள் இடையில வாய் தகராறு வந்துடுத்து ஓய்...
''ஸ்டேஷன் அதிகாரியும், தனிப்பிரிவு போலீசும் சீனியர்களுக்கு ஆதரவா, 'நாங்க எஸ்.பி., ஆபீஸ்ல சொல்லி, உங்களை ஆயுதப்படைக்கு துாக்கி அடிச்சிடுவோம்'னு மிரட்டல் விடுத்திருக்கா...
''அசராத ஜூனியர்கள், 'எங்களை மீறி நீங்க எப்படி மணல் எடுக்குறீங்கன்னு பார்த்துடலாம்'னு சவால் விடுத்திருக்கா... கொள்ளிடம் போலீசார் மத்தியில எப்ப வேணும்னாலும் மாமூல் மோதல் வெடிக்கலாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.