/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட சமூக நல கூடம்! தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட சமூக நல கூடம்!
தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட சமூக நல கூடம்!
தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட சமூக நல கூடம்!
தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட சமூக நல கூடம்!
PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM

''பெருமை அடிச்சதுக்கு மாறா கடன்ல இருக்குதுங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யாருக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தஞ்சாவூர் மாநகராட்சியின் தி.மு.க., மேயர் ராமநாதன் 2022ம் ஆண்டு, 'தமிழகத்தில் கடன் இல்லாத மாநகராட்சி தஞ்சாவூர் தான்'னு பெருமை அடிச்சாருங்க... ஆனா, கடனில்லாத மாநகராட்சியா காட்டுறதுக்காக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட வணிக வளாகங்களில் கடைகளை ஏலம் எடுத்தவங்க கட்டிய டிபாசிட் தொகையை கணக்குல காட்டியிருக்காங்க...
''சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, கடை வாடகை மட்டுமே 6 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை இருக்குதுங்க... அதுவும் இல்லாம, பணியாளர்களின் சேமநல நிதி, ஊழியர்களின் கூட்டுறவு சங்க நிதி, ஓய்வூதியர்கள் பணப்பலன்கள், பி.எப்., தொகை உள்ளிட்ட இனங்களில் நிர்வாகம் கட்ட வேண்டிய தொகையை கட்டாம வச்சிருக்காங்க...
''எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சு பார்த்தா, 'ஒன்றரை வருஷத்துல மட்டும் 47.56 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு கடன் ஏறியிருக்கு... இதுக்கு மோசமான நிர்வாகமே காரணம்'னு முதல்வரிடம் முறையிட ஆளுங்கட்சி கவுன்சிலர்களே திட்டமிட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எண்ணி, எட்டே மாசத்துல மாத்திட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''ஈரோடு மாநகராட்சி கமிஷனரா, சிவகிருஷ்ணமூர்த்தி என்ற இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, எட்டு மாசத்துக்கு முன்னாடி நியமிக்கப்பட்டாரு... நீண்ட நாள் பிரச்னையான, கனி மார்க்கெட் ஜவுளி வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததும் இல்லாம, ஆக்கிரமிப்புகளையும் அதிரடியா அகற்றினாரு பா...
''அதோட, துாய்மை பணியாளர்களுக்கு 15ம் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கியதை மாற்றி, 1 அல்லது, 2ம் தேதி வழங்குறது உட்பட பல சீர்திருத்தங்களை செஞ்சாரு... மாவட்ட அமைச்சரான முத்துசாமி, மேயர் நாகரத்தினத்தின் கணவரான தி.மு.க., மாநகர செயலர் சுப்பிரமணி தலையீடுகளை தவிர்த்து, முடிவுகளை அவரே எடுத்தாரு பா...
''இதனால, கமிஷனருக்கு மக்கள் மத்தியில நல்ல பெயர் கிடைச்சது... ஆளுங்கட்சியினர் காதுல புகை வர துவங்கிடுச்சு பா...
''இதுக்கு மத்தியில, தன் அலுவலகத்தை 30 லட்சம் ரூபாய் செலவுல கமிஷனர் சீரமைச்சது, சர்ச்சையை ஏற்படுத்துச்சு... இதுக்குன்னே காத்திருந்த மாதிரி, மேலிடத்துக்கு அழுத்தம் குடுத்து, அவரை சென்னைக்கு மாத்திட்டாங்க... அடுத்து, தங்களுக்கு ஆமாம் சாமி போடும் கமிஷனரா பார்த்து நியமிக்கவும் ஆளுங்கட்சியினர் காய் நகர்த்திட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தனியாருக்கு தாரைவார்த்துட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துல, நெமிலிச்சேரி ஊராட்சி இருக்கு... இங்க, 2003 அ.தி.மு.க., ஆட்சியில், 10 லட்சம் ரூபாய்ல, சென்னை -- திருத்தணி நெடுஞ்சாலையில் சமூக நலக்கூடம் கட்டினா ஓய்...
''இப்ப இருக்கிற ஊராட்சியின் ஆளுங்கட்சி பெண் புள்ளி, கவுன்சிலர்கள் எதிர்ப்பை மீறி, தனியார் அமைப்புக்கு அந்த சமூக நலக் கூடத்தை வாடகைக்கு விட்டிருக்காங்க... அந்த நிறுவனம் பயன்படுத்துற வர்த்தக மின்சாரத்துக்கு, மக்கள் வரிப்பணத்துல இருந்து கட்டணம் கட்டறா ஓய்...
''கடந்த மூணு வருஷமா, ஊராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படறது... ஏழை, எளிய மக்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளை நடத்த தனியார் மண்டபங்களை தேடிப் போறா... அங்க லட்சக்கணக்குல வாடகை கேக்கறதால, ரொம்ப சிரமப்படறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.