/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சசிகலா முகாமுக்கு தாவும் அ.தி.மு.க., பெருந்தலை? சசிகலா முகாமுக்கு தாவும் அ.தி.மு.க., பெருந்தலை?
சசிகலா முகாமுக்கு தாவும் அ.தி.மு.க., பெருந்தலை?
சசிகலா முகாமுக்கு தாவும் அ.தி.மு.க., பெருந்தலை?
சசிகலா முகாமுக்கு தாவும் அ.தி.மு.க., பெருந்தலை?
PUBLISHED ON : ஜூன் 19, 2024 12:00 AM

''பணியில ரொம்ப கறாரா இருக்காங்க ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
''பரவாயில்லையே... யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''முழுசா கேக்காம சர்டிபிகேட் தரப்டாது... சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... பட்டா மாறுதல் உட்பட எந்த சான்றிதழ் வழங்கணும்னாலும், கறாரா, 'காணிக்கை' வசூல் பண்ணிட்டு தான், சான்றிதழை கையில தராங்க ஓய்...
''சான்றிதழ்களுக்கு விண்ணப்பிச்சுட்டு, 'வெயிட்' வைக்கலைன்னா, பொதுமக்களை அலைக்கழிக்கறாங்க... இவங்களை பத்தி உயர் அதிகாரிகளுக்கு புகார் பண்ணாலும், அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல ஓய்...
''இதனால, 'இந்தம்மா வாங்கறதுல, அவாளுக்கும் பங்கு போறதோ'ன்னு பொதுமக்கள் சந்தேகப்படறா... அதுக்கு ஏற்ற மாதிரி அந்தம்மாவும், 'என்னை யாரும் அசைக்க முடியாது... எனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு தெரியுமோ'ன்னு சக அதிகாரிகளிடம் சொல்றாங்க ஓய்...''என்றார், குப்பண்ணா.
''அது சரி... 'தமிழ்'நாட்டுல பாதி அதிகாரிகள் இப்படித் தான் இருக்காங்க...'' என, அலுத்து கொண்ட அன்வர்பாயே, ''என்கிட்டயும் ஒரு பெண் அதிகாரி தகவல் இருக்குது பா...'' என்றபடியே தொடர்ந்தார்...
''சென்னை, நந்தனத்துல ஆவின் தலைமை அலுவலகம் இருக்கே... இங்க, விற்பனை பிரிவுல இருக்கிற ஒரு பெண் அதிகாரி, விடுமுறை நாட்கள்லயும், அவங்களுக்கான அரசு வாகனத்தை வீட்டுக்கு எடுத்துட்டு போய், தன் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துறாங்க பா...
''அது மட்டுமில்ல... அடிக்கடி, 10 - 15 நாள்னு லீவு போட்டுட்டு, அரசு வாகனத்தை எடுத்துட்டு, குடும்பத்தோட வெளியூருக்கு டூர் போயிடுறாங்க... அதே நேரம், அவங்களிடம் வேலை பார்க்கிற ஊழியர்கள் லீவு கேட்டா தர மறுத்துடுறாங்க பா...
''அதுவும் இல்லாம, 'உனக்கு எதுக்கு லீவு... வீட்டுல அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை... யார் கூட ஊரை சுத்த போறே'ன்னு ஏடாகூடமா ஒருமையில பேசியும் புண்படுத்துறாங்க... இதனால, ஊழியர்கள் எல்லாம் விரக்தியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மதில் மேல் பூனையா நின்னுட்டு இருக்காரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சம்பந்தமா, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துல, பழனிசாமி தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தியிருக்காவ... அவை தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட பலரும் கலந்துக்கிட்டாவ வே...
''அப்ப ஒரு குரூப், 'தேர்தலை புறக்கணிக்கலாம்'னும், இன்னொரு குரூப், 'தேர்தல்ல நிற்போம்'னும் சொல்லியிருக்கு... கடைசியா, புறக்கணிப்பு முடிவை அறிவிச்சுட்டாவ... இதுல பங்கேற்ற ஒரு மாநில நிர்வாகி, கூட்டம் முடிஞ்சு வெளியில போறப்ப, தன் கருத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க ரொம்ப ஆசைப்பட்டிருக்காரு வே...
''ஆனா, அவரை கோழி அமுக்குறாப்புல இன்னொரு மாநில நிர்வாகி அமுக்கி, அப்படியே தள்ளிட்டு போயிட்டாரு... பேட்டி குடுக்க நினைச்ச மாநில நிர்வாகிக்கு, சசிகலா தரப்புல இருந்து அழைப்பு வந்திருக்கு வே...
''அவரோ, இரு மனசா இருக்காராம்... ஆனா, சசிகலா தரப்புல இருந்து சாதகமான சிக்னல் வந்துட்டா, 'உசைன் போல்ட்' வேகத்துல ஓட்டம் பிடிச்சிடுவார்னு பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.