Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சோலார் நிறுவன மோசடிக்கு துணை போகும் அதிகாரிகள்!

சோலார் நிறுவன மோசடிக்கு துணை போகும் அதிகாரிகள்!

சோலார் நிறுவன மோசடிக்கு துணை போகும் அதிகாரிகள்!

சோலார் நிறுவன மோசடிக்கு துணை போகும் அதிகாரிகள்!

PUBLISHED ON : ஜூன் 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நாளிதழை மடித்தபடியே, ''திட்டமிட்ட வேட்பாளரை அறிவிக்க முடியாம போயிட்டு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தகவலா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''ஆமா... விக்கிரவாண்டி தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளரா, பா.ம.க.,வுல இருந்த, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையை அறிவிக்க சீமான் நினைச்சாரு வே... ஆனா, விசாரிச்சப்ப தேர்தலில் நிற்பதற்கான, 25 வயது அவங்களுக்கு ஆகலையாம்...

''அப்புறமா தான், தர்மபுரி லோக்சபா தேர்தல்ல போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹோமியோபதி டாக்டர் அபிநயாவுக்கு வாய்ப்பு கிடைச்சதுன்னு அந்த கட்சியினர் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''தோழர்களுக்கே தண்ணி காட்டுறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''தஞ்சாவூர் மாவட்டம், வெண்டையம்பட்டி கிராமத்தில், 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கழிப்பறைகள் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருக்கிறதா, இந்திய கம்யூ., கட்சியினர் வழக்கு தொடர்ந்தாங்க... நீதிமன்ற உத்தரவின்படி, குழு அமைச்சு விசாரிச்சப்ப, வீடு மற்றும் கழிப்பறை கட்டாம பணம் எடுத்தது உறுதியானது பா...

''இது சம்பந்தமா, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு பண்ணியும், ஆறு வருஷமா எந்த நடவடிக்கையும் இல்ல... தோழர்கள் விசாரிச்சப்ப, 'கழிப்பறை முறைகேட்டை விசாரிக்க மட்டும் தான் உத்தரவு இருக்கு... வீடு கட்டுற முறைகேடு சம்பந்தமா விசாரிக்க எந்த உத்தரவும் இல்ல'ன்னு சம்பந்தப்பட்ட ஆடிட்டர் நழுவிட்டாரு பா...

''லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் சரியான, 'ரெஸ்பான்ஸ்' இல்ல... இதனால கடுப்பான தோழர்கள், 'கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கு... முறைகேட்டுக்கு காரணமான அப்போதைய பி.டி.ஓ., பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுறதால, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றணும்'னு மேலிடத்துக்கு மனு அனுப்பியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''சோலார் நிறுவன மோசடிக்கு ஒத்து ஊதிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம், பெரம்பலுார் மாவட்டம், தெரணி கிராமத்துல, பல நுாறு ஏக்கர்ல சோலார் பேனல்களை அமைச்சிட்டு இருக்கு... அரசு வழிகாட்டுதல், விதிகளை கண்டுக்காம, விவசாயிகளின் விளைநிலங்களை மிரட்டி வாங்கி பேனல்களை அமைக்கறா ஓய்...

''சம்பந்தப்பட்ட விவசாயிகள் பெயர்லயே, கோவையில இருக்கற தனியார் வங்கியில கோடிக்கணக்குல கடனும் வாங்கியிருக்கா... ஆனா, விவசாயிகளுக்கு நிலத்துக்கான பணத்தை தராம இழுத்தடிக்கறா ஓய்...

''குளம், குட்டை, கண்மாய், ஏரி வரத்து கால்வாய்களையும் ஆக்கிரமிச்சிருக்கா... அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் சுண்ணாம்பு சுரங்கத்துலயும் சோலார் பேனல் அமைக்கறா ஓய்...

''இது பற்றி கேள்வி கேக்கற கிராம மக்கள், விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கறதும் இல்லாம, பொய் வழக்கும் போடறா... கோவை நிறுவனத்தின் உரிமையாளருக்கு, சென்னை சைபர் கிரைம்ல இருக்கற போலீஸ் அதிகாரி ஒருத்தர் பக்கபலமா இருக்கார்...

''உள்ளூர்லயும் ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு வருவாய் துறை அதிகாரியும் பல லட்சங்களை வாங்கிட்டு, சோலார் நிறுவனத்துக்கு சேவகம் பண்ணிட்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us