Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அழகிரி வருகைக்காக காத்திருந்த தி.மு.க., புள்ளிகள்!

அழகிரி வருகைக்காக காத்திருந்த தி.மு.க., புள்ளிகள்!

அழகிரி வருகைக்காக காத்திருந்த தி.மு.க., புள்ளிகள்!

அழகிரி வருகைக்காக காத்திருந்த தி.மு.க., புள்ளிகள்!

PUBLISHED ON : ஜூன் 17, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், அன்வர்பாய்க்கு, 'பக்ரீத்' வாழ்த்து தெரிவித்தனர். நன்றி தெரிவித்த அன்வர்பாய், ''குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டுகளை வாங்குறதுல கோட்டை விட்டுட்டாங்க பா...'' என்றார்.

''எந்த கட்சி விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தென்காசி தொகுதி யில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு, ரெண்டாவது இடத்தை பிடிச்சாரே... இவருக்கு, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் ஓட்டுகளுடன், இதர சமூகத்தினர் ஓட்டுகளும் சாதகமா இருந்திருக்குது பா...

''ஆனா, ராஜபாளையம் பகுதியில் வசிக்கிற குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் ஆதரவு எப்பவும், கிருஷ்ணசாமிக்கு தான் இருக்குமாம்... அதன்படி, இந்த முறை, நமக்கு தான் ஓட்டு போடுவாங்கன்னு, அவரது கட்சி நிர்வாகிகள், அந்த சமுதாய முக்கிய பிரமுகர்களை சந்திச்சு ஆதரவு கேட்காம, அசால்டா இருந்துட்டாங்க பா...

''இதனால, அவங்க ஓட்டுகள், இந்த முறை, பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியனுக்கு விழுந்துடுச்சு... 'அவங்க ஓட்டு மட்டும் கிடைச்சிருந்தா, வெற்றி கோட்டை கிருஷ்ண சாமி தொட்டிருப்பார்'னு சொல்றாங்க பா...'' என்றார்,அன்வர்பாய்.

''பஞ்., தலைவரை காப்பாற்ற போராடுதாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராம பஞ்சாயத்து தலைவரா, தி.மு.க., பிரமுகர் இருக்காரு... இவரது உறவுக்கார பையன் ஒருத்தர், மைனர் பெண்ணை கல்யாணம் பண்ணிட்டாரு வே...

''அந்த பையனின் சொந்தக்காரங்க, அந்த பெண்ணை அடிச்சு, உதைச்சு தாலியை பறிச்சுட்டாங்க... இதுக்கு, பஞ்., தலைவர் உதவியா இருந்திருக்காரு வே...

''மைனர் பெண்ணின் தாய், பஞ்., தலைவர், தாலி கட்டிய வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸ்ல புகார் குடுத்தாங்க... புகார் மேல போலீசார் நடவடிக்கை எடுக்காம இருக்க, அந்த பகுதி உளவுத்துறை அதிகாரி ஒருத்தர் களமிறங்கிட்டாரு வே...

''மைனர் பெண் உறவினர்களை மிரட்டியதும் இல்லாம, தனக்கு நெருக்கமான இன்ஸ்பெக்டர் மூலமா புகாரை அப்படியே அமுக்கிட்டாரு... இதுக்கு, பெரிய அளவுல பணமும் கைமாறியிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

''வாங்க துரைசாமி, ஊர்ல அச்சுதன் உம்மை நன்னா கவனிச்சுண்டாரா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த குப்பண்ணாவே, ''அழகிரிக்காக, தி.மு.க.,வினர் காத்திருந்த கதையை கேளுங்கோ ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...

''வேலுார்ல சிகிச்சை யில் இருந்த அழகிரி மகனை, முதல்வர் ஸ்டாலின் ரெண்டு முறை போய், நலம் விசாரிச்சுண்டு வந்தாரோல்லியோ... இதனால, ஸ்டாலின் - அழகிரி தரப்பு ஒண்ணாயிடுத்துன்னு கட்சிக்காரா சந்தோஷமா இருக்கா ஓய்...

''இந்த சூழல்ல நீண்ட நாட்களுக்கு பின், மதுரையில தன் ஆதரவாளர் இல்ல திருமண விழாவுக்கு அழகிரி, தன் மனைவியுடன் போனார்... வழிநெடுக அவருக்கு கட்சி கொடிகள் கட்டி, பேனர்கள் வச்சு, ஆதரவாளர்கள் தடபுடலா வரவேற்பு குடுத்தா ஓய்...

''அதே நேரம், அந்த பேனர்கள்ல ஸ்டாலின் படத்தை தவிர்த்துட்டா... அதே திருமணத்துல கலந்துண்ட, தி.மு.க., நகர செயலர் தளபதி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காத்திருந்து, அழகிரி வந்ததும் அவரிடம் நலம் விசாரிச்சதும் இல்லாம, ஒண்ணா நின்னு போட்டோவும் எடுத்துண்டு தான் கிளம்பினா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us