/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கோலம் போடாத வீடுகளில் 'கும்மி' அடிக்கும் கும்பல்! கோலம் போடாத வீடுகளில் 'கும்மி' அடிக்கும் கும்பல்!
கோலம் போடாத வீடுகளில் 'கும்மி' அடிக்கும் கும்பல்!
கோலம் போடாத வீடுகளில் 'கும்மி' அடிக்கும் கும்பல்!
கோலம் போடாத வீடுகளில் 'கும்மி' அடிக்கும் கும்பல்!
PUBLISHED ON : ஜூன் 16, 2024 12:00 AM

''சட்டசபை தேர்தல்ல ஆறு தொகுதிகளையும் அள்ளிடலாம்னு சொல்லுதாரு வே...'' என்றபடியே, மெது வடையை கடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தென்சென்னை தொகுதியில், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., ரெண்டாவது இடத்துக்கு வந்துட்டுல்லா... இது சம்பந்தமா, அந்த கட்சியின் மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா சில புள்ளி விபரங்களை, சமூக வலைதளங்கள்ல பகிர்ந்திருக்காரு வே...
''அதாவது, '2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை விட, 2024 லோக்சபா தேர்தல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் அதிகரிச்சிருக்கு... குறிப்பா, 2022 உள்ளாட்சி தேர்தலில், 55 வார்டுகளில் பா.ஜ., 9.9 சதவீதம் ஓட்டுகளை வாங்கியிருக்கு...
''அதே வார்டுகள்ல, இந்த லோக்சபா தேர்தல்ல 28 சதவீதம் ஓட்டுகள் வாங்கியிருக்கு... ரெண்டே வருஷத்துல, இந்த அளவுக்கு பா.ஜ., வளர்ந்து, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளியிருக்கு... அடுத்த ரெண்டு வருஷமும், கட்சி பணிகள்ல நாம தீவிரமா செயல்பட்டா, தென்சென்னைக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளையும் பிடிச்சிடலாம்'னு சொல்லியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''பணி நிரந்தரம் கிடைக்குமான்னு ஏங்கிட்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக அரசு மருத்துவமனைகள்ல பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், 1,500 பேர் தொகுப்பூதியத்தில் வேலை பார்க்கறா... இவா, நோயாளிகளை வீல் சேர்ல அழைச்சுண்டு போறது, ஓ.பி., சீட்டு தர்றது, காயம் பட்டு வர்றவாளுக்கு கட்டு போடறதுன்னு பல பணிகளை செய்றா ஓய்...
''இவாளுக்கு, 10,000 முதல் 20,000 ரூபாய் வரை தொகுப்பூதியமா தரா... 10 வருஷமா தொகுப்பூதியத்துல தான் இருக்கா... அ.தி.மு.க., ஆட்சியில, இவாளை பணி நிரந்தரம் பண்றதா முதல்வரும், அப்போதைய துறை அமைச்சரும் உறுதி தந்தும், அதை நிறைவேற்றாமலே போயிட்டா ஓய்...
''இந்த ஆட்சியிலாவது தங்களை பணி நிரந்தரம் பண்ணிடுவாங்கற நம்பிக்கையில இருக்கா... இது சம்பந்தமா, முதல்வர், அமைச்சரை பார்த்து மனு குடுக்கவும் தயாராயிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கோலம் போடாத வீடுகளா பார்த்து, 'கும்மி' அடிச்சிட்டு போயிடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டம், ஆத்துார் சப் - டிவிஷன்ல ஏழு போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்குதுங்க... இதுல, மல்லியக்கரை தவிர்த்து, இதர ஆறு ஏரியாக்கள்ல நகர் மற்றும் கிராமங்கள்ல சில மாசமா திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகமாகிடுச்சுங்க...
''போன வாரம், ஆத்துார் டவுன் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பா, 'சிசிடிவி' பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தப்ப, சொகுசு காரில் ஆயுதங்களுடன் வர்ற கும்பல், பூட்டிய வீட்டை உடைச்சு, கொள்ளை அடிச்சிட்டு போறது தெரிஞ்சது...
''குறிப்பா, காலையில கோலம் போடாத வீடுகளை இந்த கும்பல் நோட்டம் பார்த்துட்டு போயிடுதுங்க... வெளியூர் போயிருக்கிறதால தான் கோலம் போடலைங்கிறதை தெரிஞ்சிட்டு, ராத்திரி வந்து, பூட்டை உடைச்சு, கைவரிசையை காட்டிட்டு போயிடுதுங்க... இதனால, 'தனிப்படை அமைச்சு திருட்டு கும்பலை பிடிக்கணும்'னு இந்த பகுதி மக்கள் எல்லாம் கேட்டுட்டு இருக்காங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெஞ்ச் மவுனித்தது.