Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பால் பையில் பணம் வசூலிக்கும் பெண் அதிகாரி!

பால் பையில் பணம் வசூலிக்கும் பெண் அதிகாரி!

பால் பையில் பணம் வசூலிக்கும் பெண் அதிகாரி!

பால் பையில் பணம் வசூலிக்கும் பெண் அதிகாரி!

PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''மாமூல் வாழ்க்கையில் ஊறி கிடக்கிறாங்க பா...'' என்றபடியே, பட்டர் பிஸ்கட்டை கடித்தார் அன்வர்பாய்.

''எந்த ஊர் போலீசாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை திருவேற்காடு மற்றும் சுற்று பகுதிகள்ல, 'டிவி சீரியல் ஷூட்டிங்' என்ற பெயர்ல, தனி வீடுகள்ல பாலியல் தொழில் அமோகமா நடக்குது... இதுக்கு, ஆளுங்கட்சியினர் ஆசியும் இருக்குது பா...

''அதுவும் இல்லாம, நிலத்தடி நீர் திருட்டு மற்றும் நீர்வள ஆதார துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் சவுடு மண், மணல் திருட்டும் தங்கு தடையில்லாம நடக்குது... பராமரிப்பு இல்லாம கிடக்கிற நகராட்சி பூங்காக்கள்ல கஞ்சா, குட்கா விற்பனை களைகட்டுது பா...

''இதனால, உள்ளூர் மக்கள் மட்டுமில்லாம, திருவேற்காடு கோவிலுக்கு வந்துட்டு போற பக்தர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுது... திருவேற்காடு போலீசாரோ, 'உபரி வருவாய்' ஈட்டுறதுல தான் குறியா இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''மாவட்ட செயலரிடம் புலம்பி தள்ளியிருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க.,வுல, இளைஞரணி உட்பட 23 சார்பு அணிகள் செயல்படுது... ராப்பகலா, கட்சிக்காக கடுமையா உழைக்கிற தங்களுக்கு எந்த 'டெண்டர்' பணிகளும் தர்றதில்லைன்னு, சார்பு அணிகளின் நிர்வாகிகள் வேதனைப்படுதாவ வே...

''இதனால, 'ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு மட்டுமே பல கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை மாவட்ட செயலர் பழனியப்பன் வாங்கி குடுக்காரு... எங்களை கண்டுக்கவே மாட்டேங்காரு'ன்னு மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் புகார் பட்டியல் வாசிச்சிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பால் பையில பணம் பொங்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''புதிர் போடாம சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கோவை மாநகராட்சி கிழக்கு பகுதிக்கு, பெரும் தொகையை குடுத்து ஒரு பெண் அதிகாரி வந்திருக்காங்க... இவங்களது வசூல் டெக்னிக்கை பார்த்து, மற்ற அதிகாரிகள் வாயடைச்சு போயிருக்கா ஓய்...

''அதாவது, கான்ட்ராக்டர் உட்பட யாரா இருந்தாலும், லஞ்ச தொகையை, இந்தம்மா ஆத்து வாசல்ல கட்டியிருக்கற பால் பையில சத்தமில்லாம போட்டுடணும்... அதிகாரி, தன் அம்மாவுக்கு போன் போட்டு, பணத்தை எடுத்து எண்ணி பார்க்க சொல்லுவாங்க... அவங்க சரியா இருக்குன்னு சிக்னல் குடுத்ததும், பைல்ல கையெழுத்து போட்டு அனுப்பிடுவாங்க ஓய்...

''இது போக, ஒரு லேடி பில் கலெக்டர், அதிகாரி வீட்டுக்கு வந்து துப்பரவு பண்ணி, சமையலும் பண்ணி வச்சுட்டு போகணும்... இன்னொரு பில் கலெக்டர், வீட்டுக்கு தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கி தந்துடணும் ஓய்...

''இன்னொரு அதிகாரி, சொத்து வரி நிர்ணயிக்கறதுக்கான கமிஷனை வசூல் பண்ணி தரணும்னு தனித்தனியா பிரிச்சு, 'அசைன்மென்ட்' குடுத்திருக்காங்க... தமிழகத்தின் தென்கோடியை சேர்ந்த இவங்க, அந்த மாவட்ட ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கு வேண்டியவங்களாம்... அவரது பரிந்துரையில் தான் இங்க வந்திருக்காங்க ஓய்...

''அதுவும் இல்லாம, சக அதிகாரிகளிடம், 'நான் பெருசா எதிர்பார்த்து வந்தேன்... அந்த அளவுக்கு கலெக் ஷன் இல்லையே'ன்னு உச் கொட்டறாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''பால் பையில பணம் வாங்கலாம்கிற கவித்து வமான ஐடியாவை, முக்கிய புள்ளி தான் குடுத்திருப்பாரோ...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us