/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஓங்கும் உதயநிதி கை! கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஓங்கும் உதயநிதி கை!
கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஓங்கும் உதயநிதி கை!
கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஓங்கும் உதயநிதி கை!
கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் ஓங்கும் உதயநிதி கை!
PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

''உயர் பதவிகளை கைப்பற்ற, 'பைபாஸ் ரூட்'டுல காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாங்க...'' என, இஞ்சி டீயை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை, வேப்பேரி கால்நடை பல்கலைக் கழகத்துல இருக்கிற முக்கிய அதிகாரி, துணைவேந்தர் பதவியை பிடிக்க காய் நகர்த்திட்டு இருக்காருங்க... அதே பல்கலையில, பேராசிரியரா இருக்கிற தொழில்நுட்ப அதிகாரி ஒருத்தர், பதிவாளர் பதவியை பிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்காருங்க...
''இவங்க இருவருமே, கல்லுாரி காலத்து நண்பர்களாம்... இதனால, பல்கலையின் முக்கிய பதவிகளுக்கு ரெண்டு பேருமே வந்துட்டா, எதிர்காலம் வளமா இருக்கும்னு கணக்கு போட்டு, 'பைபாஸ் ரூட்'ல பார்க்க வேண்டியவங்களை பார்த்துட்டு இருக்காங்க...
''இதுல வேடிக்கை என்னன்னா, ரெண்டு பேரும் அந்த பதவிகளுக்கு வந்துட கூடாதுன்னு பல்கலை ஊழியர்கள்ல ஒரு குரூப் தடுப்பாட்டம் ஆடுது... அதாவது, அவங்க ஏற்கனவே செய்துள்ள பல முறைகேடுகள் தொடர்பான புகார்களை, கவர்னர், முதல்வர், அமைச்சருக்கு அனுப்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பெண் அதிகாரியை மாத்தியே ஆகணும்னு நெருக்கடி தர்றாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருச்சிக்கு பக்கத்து மாவட்டத்துல, ஆளுங்கட்சியை சேர்ந்த, 'மாஜி' மத்திய அமைச்சர் வச்சது தான் சட்டம்... மாவட்டத்தை இப்பவும் தன் கட்டுப்பாட்டுல தான் வச்சிருக்காரு பா...
''இந்த மாவட்டத்துல இருக்கிற தொழிலதிபருக்கும், மாஜிக்கும் ஆகாது... இதனால, 'தொழிலதிபர் மேல ஏதாவது ஒரு வழக்கை போட்டு, அவரை உள்ளே தள்ளுங்க'ன்னு பெண் போலீஸ் உயர் அதிகாரிக்கு உத்தரவு போட்டாரு பா...
''ஆனா, அதை செய்யாத பெண் அதிகாரி, 'மாஜி' இப்படி போட்ட உத்தரவை, வெளியில கசிய விட்டுட்டாங்க... இதனால, கடுப்பான, 'மாஜி' அந்த பெண் அதிகாரியை மாத்தியே தீரணும்னு தலைமையிடம் அடம் பிடிச்சிட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆளுங்கட்சியில சீனியர்கள் எல்லாம் வெலவெலத்து போய் கிடக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அவங்களுக்கு என்ன வே பிரச்னை...'' என கேட்டார், அண்ணாச்சி.
''தி.மு.க.,வுல எப்பவுமே மாவட்ட செயலர்கள் தான், 'பவர் சென்டர்'களா இருப்பா... ஆட்சியில் இருந்தாலும், இல்லாட்டியும் அந்தந்த மாவட்ட கட்சி அமைப்புகள்ல, அவா வச்சது தான் சட்டமா இருக்கும் ஓய்...
''பகுதி, ஒன்றியம், நகரம், வட்ட செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள்னு, மாவட்ட செயலர் பரிந்துரை பண்றவங்களுக்கே தலைமையும் பதவிகள் தரும்... இப்ப, அந்த நிலைமை படிப்படியா மாறிண்டு வரது ஓய்...
''அதாவது, மாவட்டங்கள்ல சில பதவிகளுக்கு, செயலர்கள் பரிந்துரை பண்ணாதவாளையும் தலைமையில இருந்து நியமிக்கறா... உதயநிதியின் உத்தரவுப்படி தான் இந்த நியமனங்கள் நடக்கறது ஓய்...
''உதாரணத்துக்கு, மதுரையில ரெண்டு வருஷமா காலியா இருந்த புதுார் பகுதி செயலரா, இளைஞர் அணியை சேர்ந்த புண்ணியமூர்த்தின்னு ஒருத்தரை உதயநிதி உத்தரவுப்படி நியமிச்சிருக்கா... இதை பார்த்துட்டு, சீனியர்கள் எல்லாம் கலக்கத்துல இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.