Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ துணை மேயருக்கும் காத்திருக்கும் 'கண்டம்!'

துணை மேயருக்கும் காத்திருக்கும் 'கண்டம்!'

துணை மேயருக்கும் காத்திருக்கும் 'கண்டம்!'

துணை மேயருக்கும் காத்திருக்கும் 'கண்டம்!'

PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''மிரட்டி மிரட்டி, வசூல் பண்ணு தாவ வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊர் போலீஸ்காரங்களை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''சென்னை, அண்ணாநகர்ல நிறைய தனியார் பார்கள், ஸ்பாக்கள் மற்றும் ஹோட்டல்கள் விதிகளை மீறி இயங்குது... இதனால, இந்த ஏரியாவுல இருக்கிற உளவுப்பிரிவு போலீசார், மாமூல் மழையில குளிக்காவ வே...

''குறிப்பா, அண்ணாநகர்ல ஐ.எஸ்., மற்றும் இணை கமிஷனரின் ஐ.எஸ்., 2 போலீசார் தவிர, எஸ்.பி.சி.ஐ.டி., போலீசாரும், தங்களது பதவியை பயன்படுத்தி, 'கல்லா' கட்டுதாவ... 'கட்டிங்' தர மறுக்கிறவங்களை வழக்கு போடுறதா மிரட்டி வசூல் பண்ணுதாவ...

''அது மட்டும் இல்லாம, போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்க வர்றவங்களை வாசல்லயே மடக்கி, தகவல் திரட்டுறதா சொல்லி, கட்டப்பஞ்சாயத்து பண்ணி காசு சம்பாதிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''என்கிட்டயும் ஒரு வசூல் மேட்டர் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சின்ன கடைகள்ல போன வருஷம் குட்கா பொருட்கள் விற்றதா, போலீசார் வழக்கு பதிவு பண்ணினா... இதுக்குரிய அபராதத்தை கடைக்காரா எல்லாம் கட்டிட்டா ஓய்...

''இந்த வருஷம், இந்த கடைகள்ல போலீசார் எந்த சோதனையும் நடத்தாம, குட்கா பொருட்களை விற்பனை பண்ணதா, மறுபடியும் வழக்கு பதிவு பண்ணியிருக்கா... இதையே காரணம் காட்டி, ஊத்தங்கரை பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இந்த கடைகளுக்கு போய், '25,000 ரூபாய் அபராதம் கட்டணும்... இல்லாட்டி கடைகளுக்கு சீல் வச்சிடுவோம்'னு மிரட்டறா ஓய்...

''பயந்து போன பலர் 25,000 ரூபாயை கட்டியிருக்கா... 'சின்ன கடைகளை வச்சு பொழப்பு நடத்தற எங்க வயித்துல அடிக்கறாளே'ன்னு அவாள்லாம் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''துணை மேயருக்கும் சிக்கல் காத்துட்டு இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''ஒரு வழியா, கோவை மாநகராட்சி பெண் மேயர் கல்பனாவை ராஜினாமா செய்ய வச்சுட்டாங்களே... 'ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்கலை... செலவும் செய்யலை...

''எதுக்கு எடுத்தாலும், சிறையில இருக்கிற, 'மாஜி' அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டுறாங்க'ன்னு அந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களா போன டி.ஆர்.பி., ராஜா, பூச்சி முருகன் ஆகியோர், முதல்வரிடமே புகார் தெரிவிச்சிட்டாங்க...

''இதுக்கு அப்புறம் தான், பெண் மேயரிடம் ராஜினாமா கடிதத்தை தலைமை வாங்கியிருக்கு... இதுக்கு மத்தியில, கோவை மாநகராட்சியில் நடந்த, 'டெண்டர்' முறை கேடுகள்ல மேயருக்கும், துணை மேயர் வெற்றிச் செல்வனுக்கும் உள்ள தொடர்புகளை ஆதாரமா வச்சு, தென் மண்டல கான்ட்ராக்டர்கள் சங்கம், ஐகோர்ட்டில் வழக்கு போட்டிருக்குதுங்க...

''இந்த வழக்கு விசாரணைக்கு வர்றப்ப, துணை மேயரின் பதவிக்கும் சிக்கல் வரும்கிறாங்க... இன்னொருபுறம், துணை மேயர் பதவியை காலி பண்றதுல, அ.தி.மு.க., 'மாஜி' தரப்பும் தீவிரமா இருக்குதுங்க...

''ஏன்னா, 'மாஜி'யின் வார்டுல தான் துணை மேயர் ஜெயிச்சிருக்காரு... அவரும், மாஜியின் வீட்டுக்கு முன்னாடி குழி தோண்டுறது, ரோட்டை மறிக்கிறதுன்னு குடைச்சல் குடுத்துட்டு இருக்காரு...

இதனால, அவரது பதவியை காலி பண்ணவே, மாஜி, தன் பினாமி மூலமா வழக்கு போட்டிருக்கிறதாகவும் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us