/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 15 ஆண்டாக மாற்றப்படாத மாநகராட்சி அதிகாரிகள்! 15 ஆண்டாக மாற்றப்படாத மாநகராட்சி அதிகாரிகள்!
15 ஆண்டாக மாற்றப்படாத மாநகராட்சி அதிகாரிகள்!
15 ஆண்டாக மாற்றப்படாத மாநகராட்சி அதிகாரிகள்!
15 ஆண்டாக மாற்றப்படாத மாநகராட்சி அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜூலை 13, 2024 12:00 AM

''கவர்னர் பதவி கனவு கலைஞ்சுட்டதால, புத்தகம் எழுத போறாருங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மத்தியில், காங்., கூட்டணி ஆட்சி வந்தா, தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, கவர்னர் பதவி தரப்படும்னு டில்லி மேலிட தலைவர்கள் சொல்லியிருந்தாங்களாம்... ஆனா, மீண்டும் பா.ஜ.,வே வந்துட்டதால, அடுத்த அஞ்சு வருஷத்துக்கு அதுக்கு வாய்ப்பே இல்லன்னு பீட்டருக்கு தெரிஞ்சு போயிடுச்சுங்க...
''பீட்டர் நிறைய படிக்கிறதும் இல்லாம, எழுதவும் செய்வாரு... ஏற்கனவே, 'நெஞ்சில் விளைந்த நெல்மணிகள்' உட்பட மூணு புத்தகங்களை எழுதி, மறைந்த தலைவர்கள் கருணாநிதி, மூப்பனாரிடம் பாராட்டு வாங்கிஇருக்காருங்க...
''இப்ப, 'நாட்டுல நிஜமான ஜனநாயகம் மலர்ந்திருக்கா' என்ற கேள்விக்கு பதில் தர்ற வகையில புதிய புத்தகம் எழுத தயாராகிட்டாருங்க... தொடர்ந்து, பல புத்தகங்கள் எழுதவும் திட்டமிட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''துணையை தப்பிக்க விட்டுட்டு முழிக்காரு வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவிய பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருமண மண்டபம் கட்ட தடையின்மை சான்று வழங்க, 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெரம்பலுார் துணை தாசில்தார் பழனியப்பன், உடந்தையா இருந்த கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார், போன 2ம் தேதி ராத்திரி 7:00 மணிக்கு கைது செஞ்சாவ வே...
''அவங்களை தாலுகா ஆபீஸ்ல வச்சு விசாரிச்சிட்டு இருந்தப்ப, பழனியப்பன் நெஞ்சு வலிக்குன்னு தரையில விழுந்து புரண்டிருக்காரு... அங்க வந்த தாசில்தார் சரவணன், பழனியப்பனை மருத்துவமனையில சேர்க்க சொன்னாரு வே...
''போலீசாரும், 'நீங்களே இவரை மருத்துவமனையில காட்டி, எங்களிடம் ஒப்படைச்சிடுங்க'ன்னு சொல்லிட்டு போயிட்டாவ... அரசு மருத்துவமனையில் பழனியப்பனை, 'செக்' செய்த டாக்டர்கள், 'இவருக்கு எந்த பிரச்னையும் இல்ல'ன்னு சொல்லி, வெளிநோயாளியா சிகிச்சை குடுத்து, கூட்டிட்டு போக சொல்லிட்டாவ வே...
''ஆனாலும், அங்கன ஒரு பெட்டுல பழனியப்பனை படுக்க சொல்லிட்டு, காலையில் வர்றதா சரவணன் வீட்டுக்கு போயிட்டாரு... அதிகாலை 3:00 மணிக்கு பழனியப்பன், 'எஸ்கேப்' ஆகிட்டாரு வே...
''இன்னிக்கு வரை அவரை காணலை... 'அவரை கொண்டு வந்து ஒப்படையுங்க'ன்னு லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தாரை நெருக்குறதால, அவர் கையை பிசைஞ்சிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''கிட்டத்தட்ட, 15 வருஷமா பெஞ்ச் தேய்ச்சுண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், 15 வருஷமா அதிகாரிகள், ஊழியர்கள் ஒரே இடத்துல டூட்டி பார்க்கறா... நகராட்சியா இருந்தப்ப பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களே மாநகராட்சியா மாறிய பிறகும், அங்கயே நீடிக்கறா ஓய்...
''குறிப்பா, நகரமைப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் உட்பட பல பிரிவுகள்ல ஊழியர்கள் யாரையும் மாத்தவே இல்ல... தொழில் நகரான ஓசூர்ல வருமானம் கொட்டறதால தான், யாரும் இடம் மாற மாட்டேங்கறா... அப்படியே, 'டிரான்ஸ்பர்' வரும்னு தகவல் வந்தாலே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பார்த்து, வெட்ட வேண்டியதை வெட்டி, தங்களது இடத்தை கெட்டியா புடிச்சுக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.