Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வனத்துறை வாகனங்களில் பணம் பார்க்கும் கூட்டணி!

வனத்துறை வாகனங்களில் பணம் பார்க்கும் கூட்டணி!

வனத்துறை வாகனங்களில் பணம் பார்க்கும் கூட்டணி!

வனத்துறை வாகனங்களில் பணம் பார்க்கும் கூட்டணி!

PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''கிட்டத்தட்ட, ஆறு மாசமா பணியிடம் காலியாவே கிடக்குது பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழகத்துல, 1,167 நிதி நிறுவனங்கள், 14,346 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகளை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கிறாங்க... இந்த வழக்கின் ஆவணங்கள் எல்லாமே சொத்துக்கள் தொடர்பானது பா...

''இதனால, நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, உள்துறை செயலர், டி.ஜி.பி.,ன்னு பலரது கேள்விகளுக்கு பதில் தரணும்... இந்த பணிகளை கவனிக்க, பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிடத்து எஸ்.பி.,யா கலைச்செல்வன் இருந்தாரு பா...

''அவரை மாத்தி, ஆறு மாசத்துக்கு மேலாகிடுச்சு... ஆனா, இன்னும் அந்த இடத்துக்கு புதிய எஸ்.பி.,யை நியமிக்கல பா... பொருளாதார குற்றப்பிரிவு தொடர்பா, உயர் அதிகாரிகள் கேட்கிற விபரங்களை தர முடியாம, கீழ்மட்ட அதிகாரிகள் திணறுறாங்க... 'சீக்கிரமே இந்த பணியிடத்தை நிரப்பணும்'னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கண்காணிப்பு கேமரா பொருத்தி, 'சரக்கு' விற்பனை பண்ணுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''சேலம் மாவட்டம், ஆத்துார் மற்றும் நரசிங்கபுரம் பகுதிகள்ல மூணு, 'டாஸ்மாக்' கடைகள் இருக்கு... ஆத்துார் பழையபேட்டை, புதுப்பேட்டை, மந்தைவெளி, முல்லைவாடி பகுதி சந்து கடைகள்ல கூடுதல் விலைக்கு, 'சரக்கு' விற்பனை நடக்கு வே...

''இதுல, ஆத்துார் நகர் பகுதியில் சந்துக்கடை நடத்துற சிலர், கடை இருக்கிற இடத்தின் சாலையின் நாலு திசைகளிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்தியிருக்காங்க... இதை, சாலையோர கடைகளுக்கு பொருத்தி இருக்கிற மாதிரி வச்சிருக்காவ வே...

''சந்துக்கடையில, 'மானிட்டர்' வச்சிருக்கா... போலீசார் சோதனைக்கு வர்றது தெரிஞ்சா, கடையை பட்டுன்னு மூடிட்டு ஓடவே, இந்த ஏற்பாட்டை செஞ்சு வச்சிருக்காவ... 'இது, போலீசாருக்கு தெரியாதா'ன்னு அந்த பகுதி மக்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''எப்படி எல்லாம் முறைகேடு பண்றா பாருங்கோ...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''அரசு வாகனங்கள் பழசாயிடுத்துன்னா, ஏலம் விடுவா... அதுலயும் வனத்துறைக்கு தரப்படும் பொலீரோ ஜீப்கள், காட்டு பாதைகள்ல பயணிக்கறதால, சீக்கிரமே கண்டமாகிடும் ஓய்...

''அரசு வாகனம் என்பதற்கான, 'ஜி ரிஜிட்ரேஷன்' இருக்கறதால, அதை ஏலம் எடுக்கும் பலரும், அரிசி கடத்தல், மரக்கடத்தலுக்கு பயன்படுத்துறதா நிறைய புகார்கள் வந்துது... இதனால, அந்த வாகனங்களை ஏலம் விடாம, பதிவெண் மாற்றி சென்னைக்கு அனுப்பணும்னு அரசாணை போட்டிருக்கா ஓய்...

''ஆனா, கோவை வன மண்டலத்தில் காலாவதியான 27 வாகனங்களை சென்னைக்கு அனுப்பாம, அங்கயே நிறுத்தி வச்சிருக்கா... வனத்துறை உயர் அதிகாரிக்கு நெருக்கமான ஒரு மெக்கானிக், ரெண்டு வண்டிகள்ல இருந்த எல்லா உதிரிப் பாகங்களையும் கழற்றி வித்துட்டு, வெறும் கூடா நிறுத்தி வச்சிருக்கார் ஓய்...

''இன்னும் ரெண்டு வண்டிகளின் பதிவெண்களை மாற்றி, விற்கவே செஞ்சுட்டாராம்... வனத்துறை அதிகாரியின் சொந்த வாகனத்தை இலவசமாவே பழுது பார்த்து தர்றதும் இல்லாம, துறைக்கு சொந்தமான பல வாகனங்களை பழுது பார்த்து, பல லட்சம் ரூபாய்க்கு பில் வச்சு இந்த கூட்டணி பணம் பார்க்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us