/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அரசு நிலத்தை தாய் பெயரில் பதிவு செய்த தாசில்தார்! அரசு நிலத்தை தாய் பெயரில் பதிவு செய்த தாசில்தார்!
அரசு நிலத்தை தாய் பெயரில் பதிவு செய்த தாசில்தார்!
அரசு நிலத்தை தாய் பெயரில் பதிவு செய்த தாசில்தார்!
அரசு நிலத்தை தாய் பெயரில் பதிவு செய்த தாசில்தார்!
PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM

''மட்டு, மரியாதை இல்லாம பேசுதாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி உயர் அதிகாரியை தான் சொல்லுதேன்... எல்லாத்துலயும் வசூல் வேட்டை நடத்துறவர், பில் கலெக்டர்களிடம் மாதாந்திர கப்பம் வசூலிக்காரு வே...
''இந்த சூழல்ல, சமீபத்துல நகராட்சி பெண் இன்ஜினியரிடம், அவங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிரிவு தொடர்பா விளக்கம் கேட்டிருக்காரு... அவங்க, தனக்கு தெரியாதுன்னு சொல்ல, அதை காதுலயே வாங்காத அதிகாரி, அவங்களை ஒருமையிலும், தரக்குறைவாகவும் திட்டியிருக்காரு வே...
''அதிர்ச்சியான பெண் இன்ஜினியர், அதிகாரி அறையை விட்டு வெளியில வந்து, அதிகாரியை தாறுமாறா திட்டி தீர்த்துட்டாங்க... இதை பார்த்துட்டு, நகராட்சி ஊழியர்கள் எல்லாம் ஆடி போயிட்டாவ... 'அதிகாரியின் அடாவடி எப்ப தான் முடிவுக்கு வருமோ'ன்னு புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பாலசுப்பிரமணி இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாயே, என்கிட்டயும் ஒரு அதிகாரி தகவல் இருக்குது பா...'' என்றார்.
''சீக்கிரம் சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், இடைப்பாடி அரசு பஸ் டிப்போவுல இருக்கிற உயர் அதிகாரி, ஆளுங்கட்சி தொழிற்சங்கமான தொ.மு.ச., நிர்வாகிகள் எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாரு... 'அவருக்கு, சேலம் கோட்ட உயர் அதிகாரி ஆதரவு இருக்கிறதால தான், எங்களை மதிக்க மாட்டேங்கிறார்'னு தொ.மு.ச., புள்ளிகள் புகார் சொல்றாங்க பா...
''ஆனா, அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினர் எந்த சிபாரிசுக்கு போனாலும், உடனே அதை செய்து குடுத்துடுறாரு... இதனால, அவர் மேல ஆளுங்கட்சியினர் பயங்கர கடுப்புல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தமிழரசன், நேத்து போன் பண்ணார்... அடுத்த வாரம் ஊருக்கு வர்றாராம்...'' என்ற குப்பண்ணாவே, ''தாசில்தாருக்கு சிக்கல் காத்துண்டு இருக்கு ஓய்...'' என்றார்.
''எந்த ஊர் விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை கலெக்டர் ஆபீஸ்ல, விமான நிலைய விரிவாக்க பணி நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ.,வா இருந்தவங்க அனிதா... 'ரிட்டயர்' ஆறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, இவங்களையும், இவங்களுக்கு கீழ் பணிபுரிந்த பர்ஷானா என்ற தாசில்தாரையும், 'சஸ்பெண்ட்' பண்ணிட்டா ஓய்...
''இவா ரெண்டு பேரும், விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்திய நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமலே, பயனாளியின் வங்கி கணக்கிற்கு, 10 கோடி ரூபாயை அனுப்பிட்டா... அந்த நிலத்தின் பயனாளி, இழப்பீடு தொடர்பா கோர்ட்ல வழக்கு போட்டு, அது நிலுவையில இருக்கற சூழல்ல, பணத்தை அவருக்கு அனுப்பிட்டதால தான், ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டா ஓய்...
''அதே ஆபீஸ்ல பணிபுரியும் பிரபல கவிஞர் பெயர் கொண்ட, 'வைர' நெஞ்சம் படைத்த தாசில்தார், சில கோடி மதிப்புள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, தன் அம்மா பெயர்ல பத்திரப்பதிவு பண்ணியிருக்கார்... பாதிக்கப்பட்டவா, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிட்டதால, அவர் மேலயும், 'சஸ்பெண்ட்' நடவடிக்கை வரும்னு சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.