/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அதிகாரிகள் பதவி உயர்வில் ஆர்வம், அவசரம் ஏன்? அதிகாரிகள் பதவி உயர்வில் ஆர்வம், அவசரம் ஏன்?
அதிகாரிகள் பதவி உயர்வில் ஆர்வம், அவசரம் ஏன்?
அதிகாரிகள் பதவி உயர்வில் ஆர்வம், அவசரம் ஏன்?
அதிகாரிகள் பதவி உயர்வில் ஆர்வம், அவசரம் ஏன்?
PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தால கலக்கத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு வங்கிகள், சங்கங்கள் செயல்படுதுல்ல... இந்த சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துறதும் இல்லாம, பயிர்க்கடன், நகை கடன்களையும் வழங்குது பா...
''கிராமங்கள்ல இருக்கிற சங்கங்கள், வேளாண் உழவு கருவிகளை, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விடுது... ஆனாலும், பல சங்கங்கள் சரிவர செயல்படுறது இல்லன்னு கிராமங்கள்ல இருந்து புகார்கள் வருது பா...
''இதை, கூட்டுறவு இணை, துணை பதிவாளர்களும் கண்டுக்காம இருக்காங்க... இதனால, கூட்டுறவு வங்கிகள்ல கடன்கள் முறையா வழங்குறாங்களா, சங்கங்கள் சரிவர செயல்படுதான்னு ஆய்வு நடத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு கூட்டுறவு துறை செயலர் கோபால் கடிதம் எழுதியிருக்காரு... இதனால, செயல்படாத சங்கங்களின் அதிகாரிகள் கலக்கத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரிகள் பஞ்சாயத்தை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மதுரை அரசு போக்கு வரத்து கழகத்துல கோட்ட உயரதிகாரிக்கும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவருக்கும் இடையே பனிப்போர் நடக்கு... உயர் அதிகாரி, நம்பர் 2வின் அதிகாரம், அவருக்கு போகும் பைல்கள், கார், டிரைவர்னு எல்லாத்தையும் பறிச்சுட்டாரு வே...
''அதுவும் இல்லாம, நம்பர் 2 திடீர் நெஞ்சு வலியால சிகிச்சைக்கு போயிருந்த நாட்களை, 'நோ ஒர்க், நோ பே'ன்னு சொல்லி, சம்பளத்தையும் கட் பண்ணிட்டாரு... நம்பர் 2வும், கார், டிரைவர் இல்லாம டிப்போக்கள், பஸ் ஸ்டாண்ட்கள்ல ஆய்வுக்கு போறதை நிறுத்திட்டாரு... ஒரு கட்டத்துல லாங் லீவுலயும் போயிட்டாரு வே...
''இதுக்கு நடுவுல கடந்த மே மாசம், மதுரை, திண்டுக்கல்லில் பொது மேலாளர் அந்தஸ்துல மூணு பேர், 'ரிட்டயர்' ஆகிட்டாவ... அவங்க பார்க்க வேண்டிய பைல்களையும் நம்பர் 2 அதிகாரி தான் பார்க்கணும்... அவர் லீவுல போயிட்டதால, ஒன்றரை மாசமா பைல்கள் நகர்வதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கு... இப்ப, 3வது இடத்துல இருக்கிற அதிகாரி ஒருத்தர் பைல்களை பார்த்து, பண மழையில குளிக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆர்வத்தோட, அவசரமும் காட்டறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆவின் நிறுவனத்துல தமிழகம் முழுக்க, தரக்கட்டுப்பாடு, பொறியியல், விற்பனை, பால் பண்ணை, பால் உற்பத்தி போன்ற பிரிவுகள்ல உள்ள உதவி பொது மேலாளர்களுக்கு, துணை பொது மேலாளர் பதவி உயர்வு வழங்க போறா... இதுக்காக, சமீபத்துல சென்னை, நந்தனம் தலைமை அலுவலகத்துல, மிக ரகசியமா பணிக்குழு கூட்டம் நடந்துது ஓய்...
''இதுல, துறையின் முக்கிய புள்ளியும், நிர்வாக உயர் அலுவலரும் கலந்துக்கிட்டா... அப்ப, பதவி உயர்வு பெறவுள்ள அதிகாரிகளை அழைத்து, 'பேச்சு' நடத்தியிருக்கா ஓய்...
''ஆவின் ஊழியர்களுக்கு, அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க, ஒன்றரை வருஷமா நிதி ஆதாரம் இல்லன்னு சொல்றா... ஆனா, உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கறதுல மட்டும் ஏன் இந்த அவசரம்னு ஊழியர்கள் கேக்கறா ஓய்...
''அதனால, 'அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பணிக்குழு அவசர, அவசரமா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யணும்... எங்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்கணும்'னும் அவா எல்லாம் கேக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.