/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அதிகாரி! அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அதிகாரி!
அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அதிகாரி!
அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அதிகாரி!
அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அதிகாரி!
PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

''குப்பை அள்ளுறதா கணக்கு மட்டும் காட்டறா ஓய்...'' என, பெஞ்சில் முதல் ஆளாக பேச்சை துவங்கிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில், துாய்மை பணிக்கு எட்டு பேட்டரி வாகனங்களை வாங்கியிருந்தா... இதுல, மூணு வண்டிகள் பழுதாகி நிக்கறது ஓய்...
''இதை சர்வீஸ் செய்து தாங்கன்னு கேட்டா, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கண்டுக்கறது இல்ல... ஆனா, எட்டு வாகனங்களுமே குப்பை அள்ளுறதா அதிகாரிகள், 'கணக்கு' மட்டும் காட்டறா ஓய்...
''இங்க மட்டுமில்ல... இதே மாதிரி, பல உள்ளாட்சி நிர்வாகங்கள்லயும் பேட்டரி வாகனங்களை பழுது நீக்கி தர்றதுல நிறைய பிரச்னைகள் இருக்கு... 'கியாரண்டி, வாரண்டி' இருந்தும் அதை வினியோகித்த நிறுவனங்கள் சரியா சர்வீஸ் பண்ணி தர்றது இல்ல ஓய்...
''சில இடங்கள்ல மட்டும் உள்ளூர் ஒர்க் ஷாப்ல குடுத்து பழுது நீக்கி பயன்படுத்தறா... இந்த மாவட்டத்துல ரெண்டு அமைச்சர்கள் இருந்தும், இதை எல்லாம் அவா கண்டுக்கறதே இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கூட்டணி கட்சி பிரமுகர் புகாருக்கே மதிப்பில்லைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''போலீஸ் தகவலா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில், பொதுமக்கள் தர்ற புகார்கள் மீது நடவடிக்கையே எடுக்க மாட்டேங்கிறாங்க... சில புகார்கள்ல வழக்கு போடாம, கட்டப்பஞ்சாயத்து பேசியே, காசு பார்த்துடுறாங்க...
''சமீபத்துல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி துணை செயலர் சங்கர் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் அடிச்சு, உதைச்சிருக்காங்க... சங்கர் புகார் குடுத்து, 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை வழக்கே பதிவு பண்ணாம, இந்தா, அந்தான்னு அவரை அலைக்கழிச்சிட்டு இருக்காங்க...
''ஆளும் கட்சியின் கூட்டணி கட்சி பிரமுகருக்கே இந்த கதின்னா, பொதுமக்கள் நிலையை சொல்லியா தெரியணும்...'' என்றார், அந்தோணிசாமி.
''அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... இவர் இங்க வந்த பிறகு, ஆபீஸ்ல லஞ்சம் பெருகிடுச்சுன்னு புகார்கள் குவியுது வே...
''டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், தனியார் பஸ் அதிபர்களிடம் மாசம் தவறாம கப்பம் வசூலிக்காரு... குறிப்பா, துாத்துக்குடி - திருநெல்வேலி இடையே ஓடுற தனியார் பஸ்களுக்கு சாதகமா செயல்படுதாரு வே...
''அதாவது, இந்த ரெண்டு ஊர்களுக்கு இடையில, 16 இடங்கள்ல பஸ்கள் நின்னு போகணும்னு அரசு உத்தரவு இருக்கு... ஆனா, எந்த பஸ்களும் இதை கடைப்பிடிக்கிறது இல்ல... பஸ் பயணியர் புகார் குடுத்தாலும், அதிகாரி கண்டுக்க மாட்டேங்காரு வே...
''அதுவும் இல்லாம, அரசு பஸ்கள் புறப்படுறதுக்கு முன்னாடி, தனியார் பஸ்கள் கிளம்புற வகையில், நேரத்தை மாத்தி அனுமதி தந்திருக்காரு... இதுல, நல்லா லாபம் பார்க்கிற தனியார் பஸ் உரிமையாளர்கள், அதிகாரியை அமோகமா கவனிச்சிடு தாவ... அதே நேரம், அரசு பஸ்களின் வருவாய் தான் அடி வாங்குது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''நான் கிளம்பறேன்... 'விநாயகர்' கோவிலுக்கு போகணும் ஓய்...'' என்ற படியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.