/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கூட்டணி கட்சியினரை கண்டுகொள்ளாத துரை வைகோ! கூட்டணி கட்சியினரை கண்டுகொள்ளாத துரை வைகோ!
கூட்டணி கட்சியினரை கண்டுகொள்ளாத துரை வைகோ!
கூட்டணி கட்சியினரை கண்டுகொள்ளாத துரை வைகோ!
கூட்டணி கட்சியினரை கண்டுகொள்ளாத துரை வைகோ!
PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

''மேயருக்கே, 'பார்க்கிங்' பண்ண இடம் இல்லைங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இருக்காங்களே... இவங்க காரை, பெரம்பூர் ஜமாலியாவில், தன் கவுன்சிலர் அலுவலகம் அருகே இருக்கிற கூட்டுறவு துறை ரேஷன் கடை முன்னாடி தான் தினமும் நிறுத்துறாங்க...
''இதனால, ரேஷன் கடைக்கு வர்ற மக்கள் சிரமப்படுறாங்க... அதுவும் இல்லாம, கடைக்கு லாரியில் பொருட்கள் வர்றப்ப, மேயர் வீட்டுக்கு ஆள் அனுப்பி, காரை எடுக்க சொல்ல வேண்டியிருக்கு... இதனால, ரேஷன் கடை ஊழியர்களும் தர்மசங்கடத்துல தவிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மாவு கட்டு போடுறதுல மன்னரா இருக்காரு வே...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அந்த எலும்பு சிகிச்சை நிபுணர்...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''முழுசா கேளும்... பெரம்பலுார் டவுன்ல கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல், கூலிப்படையினர் அட்டகாசம் அதிகமாயிட்டே இருந்துச்சு வே...
''இவங்க கொட்டத்தை அடக்குற விதமா, திருச்சியில பிரபல ரவுடியா இருந்த கொம்பனை, போன வருஷம் என்கவுன்டர்ல, 'போட்டு தள்ளிய' இன்ஸ்பெக்டர் கருணாகரனை, டவுன் ஸ்டேஷனுக்கு மாத்துனாவ... இவரும், ஊர்ல இருக்கிற ரவுடிகள் பட்டியலை எடுத்து, முதல்ல பிரபல ரவுடி அய்யனாரை பிடிச்சாரு வே...
''ஆனா பாருங்க, அய்யனார் கழிப்பறையில வழுக்கி விழுந்து கை உடைஞ்சு போயிட்டு... சமீபத்துல, கருணாகரனிடம் சிக்கிய ரவுடிகள் முருகானந்தத்துக்கு வலது கையும், விஜயராஜுக்கு இடது காலும் முறிஞ்சு போய் மாவு கட்டு போட்டிருக்காவ வே...
''இது பத்தி கேட்டா, 'கஞ்சா கடத்தல்ல ஈடுபட்ட இவங்களை பிடிக்க போனப்ப, தப்பி ஓடி ஆலம்பாடி ஆத்து பாலத்துல இருந்து குதிச்சதுல கை, கால் உடைஞ்சிட்டு'ன்னு கருணாகரன் சிரிக்காம விளக்கம் சொல்லுதாரு... இதனால, 'கருணாகரன் கையில மாட்டுனா கண்டம் ஆயிடுவோம்'னு ரவுடிகள் பயந்து நடுங்குதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கூட்டணி கட்சியினர் வருத்தத்துல இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி தொகுதியில், ம.தி.மு.க.,வின் துரை வைகோ எம்.பி.,யா ஜெயிச்சிருக்காரோல்லியோ... இதுக்காக, சமீபத்துல, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தினார் ஓய்...
''இந்த கூட்டத்துல, தி.மு.க., அமைச்சர்களும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகள் மட்டும் கலந்துண்டா...
''காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு ம.தி.மு.க., தரப்புல முறையான அழைப்பும், தகவலும் தரல ஓய்...
''இதனால, அந்த கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தை புறக்கணிச்சுட்டா... அப்பறமா, கூட்டத்துக்கு வந்தவாளுக்கு சிக்கன் பிரியாணியும், முட்டையும் மட்டும் வழங்கியிருக்கா... அதையும், கட்சியினர் கையில பாக்கு மட்டை தட்டை கொடுத்து, வரிசையில நின்னு வாங்கி சாப்பிடும்படி சொல்லிட்டதால, ம.தி.மு.க., நிர்வாகிகளே வருத்தப்பட்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.