/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முக்கிய புள்ளி முடிவு! ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முக்கிய புள்ளி முடிவு!
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முக்கிய புள்ளி முடிவு!
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முக்கிய புள்ளி முடிவு!
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முக்கிய புள்ளி முடிவு!
PUBLISHED ON : ஜூன் 04, 2024 12:00 AM

''மாவட்ட தலைவர் மர்மச்சாவு விவகாரத்துல சிக்கியவர், இன்பச்சுற்றுலா போயிட்டாருங்க...'' என, இஞ்சி டீயை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''திருநெல்வேலி விவகாரம் தான வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஆமா... நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் மரணத்தின் மர்மம் இன்னும் விலகலை... அரசியல் ரீதியான கொடுக்கல் வாங்கல்ல பிரச்னை இருந்துச்சுன்னு, தமிழக காங்., முன்னாள் தலைவர் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ., ஒருத்தர் மீதும் கடிதத்துல புகார் எழுதி வச்சிருந்தாருங்க...
''இதுல, குற்றச்சாட்டுல சிக்கிய எம்.எல்.ஏ., தன் ஆதரவாளர்களை கூட்டிட்டு காஷ்மீர், சிம்லான்னு சுற்றுலா போயிட்டாரு... ஜெயகுமாரின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் இன்னும் துக்கத்துல இருக்காங்க... ஆனா, இவர் இன்பச் சுற்றுலா போனது அவங்களை வேதனையில தள்ளியிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சொந்த ஊர் பாசம்னு புகார் வந்துடுச்சு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''இந்த வருஷம், ஹஜ் பயணத்துக்கு தமிழகத்துல இருந்து ஆயிரக்கணக்கானோர் பதிவு செஞ்சிருந்தாங்க... வழக்கமா, அகர வரிசைப்படி ஹஜ் பயணியரை தேர்வு செய்வாங்க பா...
''போன வாரம் புறப்பட்ட முதல் விமானத்தில் பயணிப்போர் பட்டியலை வெளியிட்டாங்க... இதுல, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த பயணியர் மட்டுமே இருந்தாங்க பா... அதுவும் இல்லாம, அவங்க திரும்பி வர கூடுதலா ஒரு வாரம் அவகாசமும் குடுத்திருக்காங்க...
''ஏன்னா, தமிழக ஹஜ் கமிட்டி தலைவரான எம்.எல்.ஏ., அப்துல் சமது, தன் சொந்த ஊரை சேர்ந்தவங்களுக்கு முன்னுரிமை குடுத்து, பட்டியலை தயார் பண்ணிட்டார்னு சமூக வலைதளங்கள்ல விமர்சனங்கள் எழுந்துச்சு... இதனால, அவசர அவசரமா பட்டியலை மாத்திட்டு, புது பட்டியலை வெளியிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஒரே கல்லுல பல மாங்காய் அடிக்க பார்க்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆளுங்கட்சி முக்கிய புள்ளி ஒருவரும், கோவை அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஒருத்தரும், சமுதாய பாசத்துல நீண்ட காலமா நெருக்கமா இருக்காவ... மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டசபை தொகுதிகளை சேர்த்து, பொள்ளாச்சியை தனி மாவட்டம் ஆக்கணும்னு அரசுக்கு ஆளுங்கட்சி புள்ளி பரிந்துரை பண்ணிட்டு இருக்காரு வே...
''ஏற்கனவே, ரெண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர்னு உதயநிதி ஒரு பிளான் வச்சிருக்காரே... அது அமலுக்கு வர்றப்ப, தான் பொள்ளாச்சி மாவட்ட செயலராகிடலாம்னும் முக்கிய புள்ளி நினைக்காரு வே...
''இதுல, அ.தி.மு.க., 'மாஜி' எங்க வர்றாருன்னு நீங்க கேட்கலாம்... அவருக்கு பொள்ளாச்சி பகுதியில பினாமி பெயர்ல ஏகப்பட்ட சொத்து, நிலங்கள் இருக்காம்... ஆளுங்கட்சி புள்ளி, அங்க மாவட்ட செயலர் ஆகிட்டா, ரியல் எஸ்டேட் தொழில்ல ரெண்டு பேரும் சேர்ந்து கலக்கலாம்னு மாஸ்டர் பிளான் போட்டு வச்சிருக்காவ வே...
''அதே நேரம் இவங்க திட்டம், ஆளுங்கட்சி மேலிடத்துக்கும் தெரிஞ்சிருக்கு... இதனால, முக்கிய புள்ளி மேல மேலிடம் அதிருப்தியில இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''நாயரே... காபியில, 'சக்கர' ஜாஸ்தி... 'பாணி' மாதிரி இனிக்கறது...'' என, குறை கூறியபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.