/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க இருக்கும் அதிகாரி! லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க இருக்கும் அதிகாரி!
லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க இருக்கும் அதிகாரி!
லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க இருக்கும் அதிகாரி!
லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க இருக்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

''பழிவாங்கும் விதமா, 'ரெய்டு' நடத்தியிருக்காங்க...'' என்றபடியே வந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சியைச் சேர்ந்தவர் ராஜாமணி... தி.மு.க., தலைமை கழக பேச்சாளரா இருந்தவர், உடல்நலக் குறைவால இப்ப கட்சி பணிகள்ல இருந்து ஒதுங்கிட்டாரு... இவருக்கு, திருச்சி - முசிறி ரோட்டில் சோலை என்ற, 'ரிசார்ட்' இருக்குதுங்க...
''இதுல, திருமண மண்டபம், நீச்சல் குளத்துடன் கூடிய தங்கும் விடுதிகள் இருக்குது... இந்த ரிசார்ட்ல, சமீபத்துல மதுரை கஸ்டம்ஸ் பிரிவை சேர்ந்த ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அதிரடியா புகுந்து, ரெண்டு நாட்கள், 'ரெய்டு' நடத்துனாங்க...
''அதாவது, போன பிப்ரவரி மாசம், மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருத்தர், திருமணம் ஆகாத இளம் பெண்ணுடன் இங்க வந்து தங்கியிருக்காரு... அப்ப, அறையில சில பொருட்களை உடைச்சுட்டாராம்... ரிசார்ட் தரப்பு, போலீசார் வாயிலா, அவரிடம் அதுக்கான பணத்தை வசூல் பண்ணிடுச்சுங்க...
''அவர், மதுரை கஸ்டம்ஸ்ல பணியாற்றும் ஒரு பெண் அதிகாரியின் மகனாம்... 'சில மாதங்கள் ஆறப்போட்டு இப்ப பழிவாங்கிட்டார்'னு ரிசார்ட் ஊழியர்கள் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நெப்போலியன், தள்ளி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''நகரமைப்பு குழுவை கலைச்சாலும் கலைச்சிடுவா ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''மதுரையில, சிட்டி எல்லைக்குள் கட்டட வரைபட அனுமதி, புதிய கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ்களை மாநகராட்சி தான் தரும்... பணி நிறைவு சான்றை காட்டி தான், மின் இணைப்பு வாங்க முடியும் ஓய்...
''இதுல, மாநகராட்சி நகரமைப்பு குழுவே தன்னிச்சையா செயல்பட்டு, 'நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிலைக் குழு' என்ற தனி முத்திரையுடன், பணி நிறைவு சான்றிதழ்களை குடுத்திருக்கு... இதுக்கு சரியான, 'கவனிப்பும்' நடந்திருக்கு ஓய்...
''இது சம்பந்தமா, நகரமைப்பு குழு தலைவரான நகர தி.மு.க., துணைச் செயலர் மூவேந்திரன் மற்றும் உறுப்பினர்களிடம், நகராட்சி நிர்வாக இயக்குனர் அளவுல விசாரணை நடத்தியிருக்கா... இதுல, ரெண்டு வருஷமா இந்த மாதிரி ஏகப்பட்ட சான்றிதழ்களை பிட் நோட்டீஸ் கணக்கா வாரி குடுத்தது தெரியவந்திருக்கு...
''இந்த விவகாரம் முதல்வர் ஆபீஸ் வரை போயிட்டதால, நகரமைப்பு குழுவை கலைச்சாலும் கலைச்சிடு வான்னு மாநகராட்சி வட்டாரத்துல பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''லஞ்ச ஒழிப்பு துறையில சிக்க போறாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி ஊழியர்களின் சேம நல நிதிக்கான 2010- - 2020ம் ஆண்டுக்கான வட்டியை அரசு வழங்கி ஒன்பது மாசத்துக்கு மேலாகுது... ஆனாலும், பணத்தை தராம இழுத்தடிக்காவ வே...
''பணியில் இருக்கிற வங்க, ஓய்வு பெற்றவங்க, பணி மாறுதல்ல போனவங்கன்னு 350க்கும் மேற்பட்டோர் இந்த பணத்துக்காக காத்துட்டு இருக்காவ... பணத்தை வழங்க நகராட்சி அதிகாரி ஒருத்தர் கறாரா கமிஷன் கேட்காரு வே...
''ஏற்கனவே, 'சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி மாட்டியது மாதிரி, இந்த அதிகாரியையும் சிக்க வச்சா தான் சரிப்படும்'னு ஊழியர்கள் புலம்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சுப்பையா இப்படி உட்காருங்க... நாங்க கிளம்புறோம்...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.