/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ துணை முதல்வர் பதவிக்கு ஆடிப்பெருக்கில் அறிவிப்பு? துணை முதல்வர் பதவிக்கு ஆடிப்பெருக்கில் அறிவிப்பு?
துணை முதல்வர் பதவிக்கு ஆடிப்பெருக்கில் அறிவிப்பு?
துணை முதல்வர் பதவிக்கு ஆடிப்பெருக்கில் அறிவிப்பு?
துணை முதல்வர் பதவிக்கு ஆடிப்பெருக்கில் அறிவிப்பு?
PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

சமோசாவை கடித்தபடியே, ''முக்கியமான ரெண்டு பேரை தப்பிக்க விட்டுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''போலீஸ் தகவலாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஆமா... நாலு நாளைக்கு முன்னாடி, வேலுார் மாவட்ட சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டாங்க... அப்ப, பெங்களூரு போன லாரியை மடக்கி, சோதனை நடத்துனாங்க பா...
''அதுல, பிரபல நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட மூட்டைகள்ல, 35 டன் ரேஷன் அரிசி கடத்துறது தெரியவந்துச்சு... இந்த விவகாரத்துல, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, அரிசி ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம் உட்பட அஞ்சு பேரை கைது செஞ்சாங்க பா...
''ஆனாலும், இந்த கடத்தல்ல தொடர்புடைய முக்கியமான இன்னும் ரெண்டு பேரை தப்ப விட்டுட்டதா புகார்கள் எழுந்திருக்கு... இதுக்காக, பல லட்சங்களும் கைமாறியிருக்காம் பா...'' என்றார், அன்வர்பாய்.
''மேயர் விவகாரத்தை தி.மு.க., மாவட்ட செயலர் வேடிக்கை பார்க்கறார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த மகாலட்சுமி மேயரா இருக்காங்க... இவங்களுக்கு எதிரா, சொந்த கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி துாக்கியிருக்கா ஓய்...
''மேயரை மாத்தியே ஆகணும்னு, கவுன்சிலர்கள் எல்லாம் அறிவாலயம் போய் புகார் குடுத்தா... அப்பறமா, கமிஷனரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துனா ஓய்...
''இன்னும் சிலர், தங்களது நிலைக்குழு தலைவர் பதவிகளையே ராஜினாமா பண்ணிட்டா... இதை எல்லாம் கட்டுப்படுத்தி, கட்சியினரை அமைதிப்படுத்த வேண்டிய தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வுமான சுந்தர், கையை கட்டி வேடிக்கை பார்த்துண்டு இருந்திருக்கார்... இதனால, கவுன்சிலர்களை எல்லாம் அவர் தான் துண்டி விட்டாரோன்னு மேயர் தரப்பு சந்தேகப்படறது ஓய்...
''இந்த சூழல்ல, மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துல, நாளைக்கு ஓட்டெடுப்பு நடக்க போறது... இதுல, மேயர் பதவி தப்புமான்னு காஞ்சிபுரம் மாநகராட்சியே பரபரப்பா காத்துண்டு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆடிப்பெருக்குல எது செஞ்சாலும் நல்லா வருமுல்லா...'' என, 'லீடு' தந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க, மூத்த அமைச்சர்கள் எல்லாம் சம்மதம் தந்துட்டாவ... ஆடி மாசம் நல்ல காரியம் எதுவும் பண்ண கூடாதுங்கிறதால, அறிவிப்பு வரல வே...
''அதேநேரம், ஆடி 18ம் தேதியை ஆடிப்பெருக்கு தினமா ஹிந்துக்கள் கொண்டாடுவாங்கல்லா... இது, வர்ற ஆகஸ்ட் 3ம் தேதி வருது... அதனால, அன்னைக்கு அவருக்கு துணை முதல்வர் பதவி தரலாம்னு சிலர் சொல்லுதாவ வே...
''அப்படியே, அமைச்சரவையில மாற்றம் பண்ணவும் முடிவு பண்ணியிருக்காவ... வட மாவட்டத்துல ஒருத்தர், தென் மாவட்டங்கள்ல இருவர், கொங்கு மண்டலத்துல ஒருத்தர்னு நாலு அமைச்சர்களின் தலைக்கு மேல கத்தி தொங்குது வே...
''அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கும், பிரதிநிதித்துவம் இல்லாத சில குறிப்பிட்ட ஜாதியினருக்கும் அமைச்சர் யோகம் அடிக்கும்னும், அவங்க இளைஞர்களா இருப்பாங்கன்னும் அறிவாலய வட்டாரங்கள் சொல்லுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கலைய, பெஞ்ச் அமைதியானது.