Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மின் இணைப்பு, பெயர் மாற்றத்துக்கு கறார் வசூல்!

மின் இணைப்பு, பெயர் மாற்றத்துக்கு கறார் வசூல்!

மின் இணைப்பு, பெயர் மாற்றத்துக்கு கறார் வசூல்!

மின் இணைப்பு, பெயர் மாற்றத்துக்கு கறார் வசூல்!

PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நாளிதழை மடித்தபடியே, ''நிறைய பைல்கள் தேங்கி கிடக்கறது ஓய்...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''தமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துண்டு இருக்கோல்லியோ... முதலீடுகளை ஈர்க்க, அடுத்த மாசம் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணப்பட இருக்காரே ஓய்...

''ஆனாலும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கறதுல காலதாமதம் ஏற்படுதுன்னு சொல்றா... குறிப்பா, நிதித்துறையில நிறைய பைல்கள் தேங்கி கிடக்கறது ஓய்...

''முதல்வர் ஓகே பண்ணி அனுப்பிய பைல்களுக்கே நிதித்துறையில ஒப்புதல் அளிக்க லேட் பண்றாளாம்... இதனால, முதலீட்டாளர்கள் பலரும் அதிருப்தியில இருக்கா... 'இதுல, முதல்வர் தலையிடணும்'னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''வீட்டுக்காரர் யாருன்னு மண்டையை பிய்ச்சிட்டு இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்அந்தோணிசாமி.

''ஏதோ வில்லங்க விவகாரமா தெரியுதே... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஈரோட்டுல இருக்கிற ஒரு பெண் போலீஸ் அதிகாரி, ஆயுதப்படை வளாக குடியிருப்புல வீடு எடுத்து தனியா தங்கியிருக்காங்க... இவங்க வீட்டு கதவை, போன வாரம் மதிய நேரத்துல, மர்ம நபர் ஒருத்தர், வெளிப்புறமா பூட்டிட்டு ஓடிட்டாருங்க...

''அப்ப, வீட்டுக்குள்ள நாமக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருத்தர், பெண் அதிகாரியுடன் இருந்திருக்காரு... அப்புறமா, லோக்கல் போலீசார் வந்து பூட்டை உடைச்சு ரெண்டு பேரையும் மீட்டிருக்காங்க...

''பெண் போலீஸ் அதிகாரி, ஜோதிடரை தன் கணவர்னு சொல்லியிருக்காங்க... ஆனா, அவங்க, 'பேஸ்புக் ஸ்டேட்டஸ்'ல இருக்கிற கணவரின் முகத்துக்கும், ஜோதிடர் முகத்துக்கும் சம்பந்தமே இல்லைங்க...இதனால, பெண் அதிகாரியின் கணவர் யார்னு, போலீசார் குழம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பணத்தை வெட்டுனா தான், மின் இணைப்பு தர்றாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளரா ஒரு ஆணும், உதவியாளரா ஒரு பெண்ணும் பணியில இருக்காவ வே...

''இந்த ஏரியா பொதுமக்கள் புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் வேண்டி, உரிய ஆவணங்களுடன், 'ஆன்லைன்' வழியா விண்ணப்பிக்காவ... ஆனாலும், அவங்களுக்கு காரியம் நடக்க மாட்டேங்கு வே...

''காரணம் கேட்டு போனா, 'புதிய இணைப்புக்கு 20,000 ரூபாயும், பெயர் மாற்றத்திற்கு 10,000 ரூபாயும் குடுத்தா தான் ஆச்சு'ன்னு இருவர் அணியும் கறாரா பேசி வசூல் பண்ணிட்டு தான் விண்ணப்பத்தை, 'ஓகே' பண்ணுதாவ...

''ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருத்தர், பெயர் மாற்றத்துக்கு அப்ளை பண்ணி, லஞ்சம் தர மறுத்துட்டதால, அவரது விண்ணப்பத்தையே, 'ரிஜக்ட்' பண்ணிட்டாவ... அப்புறமா அவரது மகன், மறுபடியும் விண்ணப்பிச்சு, இருவர் அணி கேட்ட பணத்தை குடுத்து, பெயர் மாற்றம் பண்ணியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

அப்போது பெஞ்சில் அமர்ந்த ஒருவர், 'என் மகள் சசிக்கு நாளைக்கு பிறந்த நாள்... 'ஆசீர்வாதம்' பண்ண நீங்க அவசியம் வரணும்...' என உரத்த குரலில் பேச, பெரியவர்கள் சத்தமின்றி கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us