/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீசார் காட்டில் பணமழை! ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீசார் காட்டில் பணமழை!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீசார் காட்டில் பணமழை!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீசார் காட்டில் பணமழை!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீசார் காட்டில் பணமழை!
PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

டபராவில் நுரை பொங்க வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, ''நம்ம நாட்டுல ஜெயிச்சதுக்கு, அமெரிக்காவுல நன்றி சொல்லியிருக்கார் ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''ஆச்சரியமா இருக்கே... யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''அமெரிக்காவில், 35 மாகாணங்கள்ல, 'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆப் பி.ஜே.பி.,' என்ற, பா.ஜ., ஆதரவு அமைப்பு, அந்நாட்டு அரசிடம் பதிவு செய்து இயங்கறது... லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழக, பா.ஜ.,வின் முன்னணி தலைவர்கள் பலரும் அமெரிக்கா போய், பல மாகாணங்கள்லயும் நடந்த கூட்டங் கள்ல கலந்துண்டு, மோடிக்கு ஆதரவா பிரசாரம் பண்ணி, 'தேர்தலுக்காக எல்லாரும் இந்தியா வந்து ஓட்டு போடணும்'னு வலியுறுத்திட்டு வந்தா ஓய்...
''இப்ப, மூணாவது முறையா, பா.ஜ., ஆட்சி அமைஞ்சுடுத்தோல்லியோ... இதுக்காக, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கலந்துரையாடல் கூட்டங்களை சமீபத்துல மிசவுரி, நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட சில மாகாணங்கள்ல நடத்தியிருக்கா ஓய்...
''இதுல, தமிழக, பா.ஜ., மாநில செயலர், எஸ்.ஜி.சூர்யா பங்கேற்றிருக்கார்... அப்ப, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முன்னேறிட்டு வர்றதையும், மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடக்கறதையும் குறிப்பிட்டு பேசி, 'அமெரிக்க வாழ் இந்தியர்கள் எல்லாரும், மோடிக்கு பக்கபலமா இருக்கணும்'னு வலியுறுத்திண்டு வந்திருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கட்சியை பத்து மாவட்டமா பிரிக்க போறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழக காங்கிரஸ்ல, லோக்சபா தேர்தல்ல சரிவர செயல்படாத மற்றும் மூத்த மாவட்ட தலைவர்களை துாக்கியடிக்க பட்டியல் தயார் பண்ணிட்டு இருக்காங்க... சென்னையில், இப்ப கட்சிக்கு ஏழு மாவட்டங்கள் இருக்குதுங்க...
''இதை இப்ப, ரெண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்டம் வீதம், 10 மாவட்டங்களா பிரிக்க போறாங்களாம்... புதுசா உருவாக இருக்கிற மூணு மாவட்டங்களின் தலைவர் பதவிகளை பிடிக்க, பலரும் இப்பவே துண்டு போட்டுட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தனிப்படையினர் காட்டுல பணமழை கொட்டுதுல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த வழக்குல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைச்சிருக்காங்கல்லா... இவங்க, வக்கீல்கள், ரவுடிகள் பலரை விசாரணை வளையத்துக்குள்ள கொண்டாந்து, அவங்களது ஆறு மாத வங்கி பரிவர்த்தனையை கைப்பற்றி விசாரிச்சிருக்காவ வே...
''இதுல சிலர், வேற சில விவகாரங்கள்ல கட்டப்பஞ்சாயத்து பண்ணி, வங்கிகள் வழியா லட்சக்கணக்குல பணம் வாங்கியிருக்காவ... இதுக்கு கணக்கு கேட்டு, தனிப்படை போலீசார் மிரட்டியிருக்காவ வே...
''இதனால, தங்களையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குல கோர்த்து விட்டுடக் கூடாதுன்னு பயந்த வக்கீல்களும், ரவுடிகளும், மிரட்டிய போலீசாருக்கு சில லட்சங்களை குடுத்து, 'ஆப்' பண்ணியிருக்காவ... குறிப்பா, வட சென்னையை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, இதுல நல்லா பணம் பார்த்துட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சாகுல் ஹமீது வாங்க... பார்த்து ரொம்ப நாளாச்சே...'' என, நண்பரிடம் அந்தோணிசாமி நலம் விசாரிக்க, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.