Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ ஐஸ்கிரீம் ஸ்பூன் செய்கிறோம்!

ஐஸ்கிரீம் ஸ்பூன் செய்கிறோம்!

ஐஸ்கிரீம் ஸ்பூன் செய்கிறோம்!

ஐஸ்கிரீம் ஸ்பூன் செய்கிறோம்!

PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ஐஸ்கிரீம் ஸ்பூன், தீக்குச்சி போன்றவற்றை உற்பத்தி செய்து வரும், கோவை மாவட்டம், அன்னுாரை சேர்ந்த, 'ராயல் ஸ்ப்லின்ட்ஸ்' உரிமையாளர், எல்பி: சொந்த ஊர் கேரளா. அப்பா கொச்சியில் தீக்குச்சி தொழிற்சாலை வைத்திருந்தார். அப்பா திடீரென இறந்து விட்டதால், சகோதரர்கள் தான் தொழிலை பார்த்து வந்தனர்.

பின், நானும், 10ம் வகுப்பு படித்தபடியே என் சகோதரர்களுடன் இணைந்து தொழிலை கவனித்தேன். இந்திய அளவில் சிவகாசி, கோவில்பட்டி, குடியாத்தம் போன்ற பகுதிகள் தான், தீப்பெட்டிக்கான பெரிய மார்க்கெட்!

நாங்களும் கேரளாவில் இருந்து இந்த பகுதிகளுக்கு தான் விற்பனை செய்வோம். நான், எம்.பி.ஏ., படிப்பதற்கு, 1999ல் கோவை வந்தேன்.

அப்போது தீக்குச்சி தயாரிப்பதற்கு இங்கு அதிக அளவு மரங்கள் இருப்பது தெரிந்தது. அதனால், இங்கு தீக்குச்சி தொழிலை செய்யலாம் என்று கோவைக்கு வந்து விட்டேன்.

கடந்த, 2018 வரை தீக்குச்சி தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது. அதன் பின் பயன்பாடு குறைய துவங்கியது.

இதனால் தொழிலில் அதிக பாதிப்புக்கு உள்ளானோம். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான், பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தனர்.

இதை வாய்ப்பாக பயன்படுத்தி, மர ஸ்பூன்கள் செய்ய திட்டமிட்டோம். உணவு துறையில் அதற்கு நல்ல டிமாண்ட் இருந்தது. அதற்கு தேவையான இயந்திரங்களை நாங்களே சொந்தமாக வடிவமைத்தோம். ஸ்பூனிலேயே நிறைய வகைகள் தயாரித்தோம். ஐஸ்கிரீம் ஸ்பூன் தான் அதிக அளவு உற்பத்தி செய்கிறோம்.

தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், பீஹார் மாநிலங்களுக்கும் நாங்கள் சப்ளை செய்கிறோம். தற்போது ஒரு நாளைக்கு, சராசரியாக, 8 லட்சம் ஐஸ்கிரீம் ஸ்பூன்கள் தயாரிக்கிறோம்.

ஒரு ஐஸ்கிரீம் ஸ்பூன், 8 பைசாவுக்கும், சாக்கோ பார் ஸ்டிக், 12 பைசாவுக்கும் விற்பனை செய்கிறோம். தீக்குச்சி கிலோ சராசரியாக, 35 ரூபாய்க்கு விற்பனைஆகும்.

கோவை, தஞ்சாவூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தான், இதற்கு தேவையான மரங்களை வாங்கி வருகிறோம். எங்களிடம், 12 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

'பேக்கிங்' செய்வதற்காக, 200 பெண்கள் வீட்டில் இருந்தே பகுதி நேரமாக பணியாற்றுகின்றனர். தற்போது கோடைக்காலம்... ஐஸ்கிரீம், சாக்கோ பார் போன்றவற்றுக்கான சீசன் என்பதால், விற்பனை நன்றாக உள்ளது. ஆடி மாதம் இவ்வளவு விற்பனை இருக்காது.

ஐஸ்கிரீம் ஸ்பூன் உற்பத்தி செய்வதற்காக நாங்களே இயந்திரம் வடிவமைக்கும் பணியில் இருந்தபோது, சுற்றி இருந்த பலர், எதற்கு இந்த, 'ரிஸ்க்' என்று கூறினர்.

தற்போது அவர்களே இன்று ஆச்சரியமாக பார்க்கின்றனர். விரைவில் பெரும் நிறுவனங்களுக்கு, தகுந்த வகையில் உற்பத்தியில் முன்னேற்றம் செய்வோம்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us