Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ இல்லத்தரசிகளுக்கு ஏதோ ஒரு திறமை நிச்சயம் இருக்கும்!

இல்லத்தரசிகளுக்கு ஏதோ ஒரு திறமை நிச்சயம் இருக்கும்!

இல்லத்தரசிகளுக்கு ஏதோ ஒரு திறமை நிச்சயம் இருக்கும்!

இல்லத்தரசிகளுக்கு ஏதோ ஒரு திறமை நிச்சயம் இருக்கும்!

PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சைவ, அசைவ தொக்கு வகைகள், சத்து மாவு மிக்ஸ், மசாலா பொருட்கள் தயாரித்து, 'கிராமிய நொறுவை' என்ற பெயரில் விற்பனை செய்து வரும், சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சுவாதி: நான் வேலை பார்த்த தொண்டு நிறுவனத்தில், புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இருந்தனர்.

அவர்களுக்கு சத்தான உணவு கொடுப்பது குறித்து பேச்சு வந்தபோது, எங்கம்மாவுடன் சேர்ந்து, சத்து மாவு மிக்ஸ் தயார் செய்து கொடுத்தேன். அதை குடித்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரிந்தது.

அதனால், நான் வேலை பார்த்த நிறுவனத்தில் எனக்கு தொடர்ந்து ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர். எங்கம்மா செய்த லட்டை சாப்பிட்ட நண்பர்கள் சிலர், 'ருசி நன்றாக இருக்கிறது.

நீங்கள் ஏன் இதையே பிசினசாக ஆரம்பிக்க கூடாது' என கேட்டனர். இதெல்லாம் தான் துவக்கம். இப்போது அம்மாவும், நானும் சேர்ந்து, 28 வகையான பொருட்கள் தயாரிக்கிறோம். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., லைசென்சும் வாங்கியுள்ளோம்.

அம்மா சூப்பராக சமைப்பார். குறிப்பாக, அவர்கள் செய்யும் தொக்கு வகைகள் மிகவும் நன்றாக இருக்கும். அனைத்து வகையான காய்கறிகளிலும், அசைவ உணவுகளிலும் அவர் தொக்கு செய்வார்.

பேச்சிலர்களுக்கும், விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கும் இந்த மாதிரி தொக்கு வகைகளை செய்து கொடுத்தால், வசதியாக இருக்கும் என்று அதையும் அறிமுகப்படுத்தினோம்.

கீரை, பிரண்டை, கத்தரிக்காய், காய்கறிகள் என சைவத்திலும், சிக்கன், மட்டன், இறால் என அசைவத்திலும் தொக்கு வெரைட்டிகள் செய்கிறோம்.

அதன்பின் சில தொடர் வாடிக்கையாளர்கள் சாம்பார் பொடி, ரசப்பொடி, மசாலா பொடி வகைகள் கேட்க ஆரம்பித்தனர். அதையும் செய்து கொடுத்தோம். நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு, ரவா லட்டு மாதிரியான ஐட்டங்களும் செய்து தருகிறோம்.

வெறும் ஏழே வாடிக்கையாளர்களுடன் ஆரம்பித்த பிசினஸ், இன்று ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் வளர்ந்திருக்கிறது.

தொடர் வாடிக்கையாளர்கள் வாயிலாக மட்டுமே மாதத்திற்கு, 50,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. பல்க் ஆர்டர் வரும்போது, லாபம் இன்னும் அதிகமாகும்.

வெறும், 3,000 ரூபாய் முதலீட்டில் தான் பிசினஸ் ஆரம்பித்தேன். சமூக வலைதளங்களிலும், 'கிராமிய நொறுவை' என்ற பெயரில், எங்கள் தயாரிப்புகளை பதிவிட ஆரம்பித்தேன். அதை பார்த்து தான் ஆர்டர்கள் வர துவங்கின.

இல்லத்தரசிகள் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை நிச்சயம் இருக்கும். அதை வீணாக்காமல், சிறு முதலீட்டில் தரமான பொருட்களை கொடுத்து பிசினஸ் ஆரம்பியுங்கள்; வரவேற்பு தானாக வரும்! தொடர்புக்கு 81109 08178

***********************

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளது!

தென்னந்தோப்பில் ஊடுபயிராக முள்சீத்தா சாகுபடி செய்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்த துரை.பாண்டி:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தான் என் சொந்த ஊர். பி.இ., மெக்கானிக்கல் முடித்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். எதிர்கால நலனை முன்னிட்டு, மனைவி, இரு குழந்தைகளுடன் இந்தியா வந்துவிட்டேன்.

விவசாயம் செய்யலாம் என்ற எண்ணத்தில், திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஊரில் 10 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கினேன்.

அப்போது நண்பர் ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, முள்சீத்தா பழங்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதாகக் கூறினார்.

இதுகுறித்த தேடலில் இறங்கியபோது தான், நீரிழிவு, மூளை நரம்பு தொடர்பான நோய்கள், வயிற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் ஆற்றலும் சீத்தா பழங்களில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

முதலில், 50 சென்ட் பரப்பில், முள்சீத்தா பழக்கன்றுகள் நடவு செய்தோம். காய்ப்புக்கு வந்ததும், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக மகசூல் அதிகரித்தது. 100 முள்சீத்தா மரங்களில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக, 500 கிலோ பழங்கள் மகசூல் கிடைக்கும்.

அதில், 50 சதவீதத்தை பழங்களாக விற்பனை செய்வோம். 1 கிலோவுக்கு 300 ரூபாய் வீதம், 250 கிலோ பழங்கள் விற்பனை வாயிலாக 75,000 ரூபாய் கிடைக்கும். மீதமுள்ள, 250 கிலோ பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சூரிய ஒளி கூடாரத்தில் உலர்த்தி, பவுடராக அரைத்து மதிப்பு கூட்டி விற்பனை செய்வோம்.

இப்படி, 250 கிலோ பழங்களில், 25 கிலோ பவுடர் கிடைக்கும். 100 கிராம் பாக்கெட், 400 ரூபாய் என விற்பனை செய்கிறோம். 25 கிலோ பவுடர் விற்பனை வாயிலாக, 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஆக, 50 சென்ட் பரப்பில், 100 முள்சீத்தா மரங்கள் வாயிலாக 1.75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளும் போக, 1.60 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். நாங்கள் மிகக்குறைவான விலைக்கு விற்பனை செய்வதால், எங்கள் பழங்கள் மற்றும் பவுடருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

அதனால், முள்சீத்தா சாகுபடி பரப்பை விரிவுபடுத்தி உள்ளோம். இன்னும் மூன்று ஆண்டுகளில் மகசூல் அதிகரித்ததும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.தொடர்புக்கு: 90256 29385





      Our Apps Available On




      Dinamalar

      Follow us