/தினம் தினம்/சொல்கிறார்கள்/ அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராகணும்! அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராகணும்!
அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராகணும்!
அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராகணும்!
அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராகணும்!
PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

திண்டுக்கல் மாவட்டம், டட்லி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக ஆசிரியரான, திருநங்கை டட்லிகா: என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி. நான் சிறுவனாக இருக்கும்போதே பெற்றோர் பிரிந்து விட்டனர்.
அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவே, வீட்டிற்குள்ளேயே அனாதை ஆனேன். அப்பா என்னை கண்டுகொள்ளவே மாட்டார்.
நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது, டட்லி பள்ளி விடுதியில் சேர்த்து விட்டனர். அதுதான் எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம்.
புத்தகத்தில் இருந்து ஆடை வரை எல்லாமே, டட்லி விடுதி தான் எனக்கு கொடுத்தது. அதனால் தான், திருநங்கையாக மாறியபோது, என் பெயரையே பள்ளியின் நினைவாக டட்லிகா என வைத்துக் கொண்டேன்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், சில நல்ல உள்ளங்களின் உதவியால், மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் டிப்ளமோ படித்து முடித்தேன். அதன்பின் மருத்துவமனையில் வேலை பார்த்தேன்.
எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் எட்டாம் வகுப்பிலேயே உணர்ந்து விட்டாலும், 2011ல் தான் என்னை முழுதாக வெளிப்படுத்திக் கொள்ள முடிவெடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அதற்கு மற்ற திருநங்கையர், 'அறுவை சிகிச்சைக்கு பின் உனக்கு எவரும் வேலை கொடுக்க மாட்டார்கள். நீ பிச்சை தான் எடுக்க வேண்டும். இல்லையெனில், நம்மை தவறான செயல்களில் தள்ளி விடுவர். அப்படி சம்பாதித்து தான், நீ ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும்' என்று கூறினர். ஆனால், நான் என் கல்வியை நம்பினேன்.
ஏற்கனவே டிப்ளமோ படித்திருந்த நான், அடுத்து இன்னொரு டிப்ளமோ கோர்ஸ் முடித்து, ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்தேன். சம்பாதித்து பணம் சேர்த்து, 2021ல், 'மேஜர் டிரான்ஸ்பார்மேஷன் சர்ஜரி' செய்து, திருநங்கையாக என் புது வாழ்க்கையை துவங்கினேன்.
சென்னையில், 'டெலி காலர்' வேலை பார்த்தபடியே, எம்.ஏ., - பி.எட்., முடித்தேன். தனியார் பள்ளியில் சிறிது நாட்கள் வேலை பார்த்தேன். இப்போது, நான் படித்த அதே டட்லி மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கிறேன்.
எனக்கு படிப்பு, வேலை இரண்டும் கிடைத்து விட்டது. அதனால், மற்ற திருநங்கையருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, 'அன்பே கடவுள்' என்ற அமைப்பை 2023ல் துவங்கினேன்; இதில், 25 திருநங்கையர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராக வேண்டும். அன்பே கடவுள் அமைப்புக்கான அலுவலகமும், குழந்தைகளுக்கான படிப்பகங்களையும் உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை.