/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பெண்களுக்கு சுய சம்பாத்திய வைராக்கியம் வேண்டும்! பெண்களுக்கு சுய சம்பாத்திய வைராக்கியம் வேண்டும்!
பெண்களுக்கு சுய சம்பாத்திய வைராக்கியம் வேண்டும்!
பெண்களுக்கு சுய சம்பாத்திய வைராக்கியம் வேண்டும்!
பெண்களுக்கு சுய சம்பாத்திய வைராக்கியம் வேண்டும்!
PUBLISHED ON : மே 30, 2025 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த உதவி வேளாண் அலுவலரான பபிதா: என் அப்பா ஊர் தலைவராக இருந்தார்; வில்லிசையில் நன்கு சம்பாதித்தார். எந்த குறையும் இல்லை. ஆனால், நான் ஆறாம் வகுப்பு படித்தபோது, அப்பா எங்களை விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார்.
அதுவரை வெளி உலகம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த அம்மா, 3,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சென்று, எங்களை வளர்க்க ஆரம்பித்தார்.
அந்த வருமானம் போதவில்லை என்று, என் தம்பி எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, தவில் வாசிக்க சென்றார். அம்மாவும், தம்பியும் சேர்ந்து தான் என்னை படிக்க வைத்தனர். அதனால், பள்ளி விடுமுறை நாட்களில் நானும், அம்மாவுடன் வேலைக்கு செல்வேன்.
எனக்கு கிடைத்த வருமானத்தில் தான் புத்தகங்கள் வாங்கினேன். பள்ளி படிப்பு முடித்ததும், கோவில்பட்டி அரசு வேளாண் கல்லுாரியில் சேர்ந்தேன்.
கல்லுாரி படிப்பு முடித்ததும், திண்டுக்கல்லில் ஒரு தொண்டு நிறுவனத்தில், வேளாண்மை தொடர்பான ஒரு வேலையில் சேர்ந்தேன்; மாதம் 6,000 ரூபாய் சம்பளம்.
என் வேலை நேரம் போக மற்ற நேரங்களில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்தேன்.
பயிற்சி வகுப்பிற்கு எல்லாம் செல்லாமல், ஓராண்டு படித்தபோது, 'என் குடும்பத்தின் எதிர்காலம், எனக்கு கிடைக்கப் போகிற வேலையில் தான் இருக்கிறது' என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.
முதன் முறையிலேயே தேர்ச்சி அடைந்தேன். 2016ல் உதவி வேளாண்மை அலுவலராக வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்பத்தில், 16,000 ரூபாய் சம்பளம். அம்மாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டேன். அம்மா மற்றும் தம்பிக்காக வீடு ஒன்று கட்டினேன்.
திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல் தான் இருந்தேன்.
கணவர் என் மேல் விருப்பப்பட்டு கேட்டபோது, 'எனக்கு வீட்டுக் கடனும், குடும்பக் கடனும் இருக்கிறது. அதனால், என் சம்பளத்தை எதிர்பார்த்து எதுவும் முடிவெடுக்காதீர்கள்' என கூறினேன்.
அதற்கு அவர் சம்மதித்தார். 2019ல் திருமணமானது. இப்போது வரை என் சம்பளம் குறித்து எதுவும் கேட்டதில்லை. வீட்டு செலவுகளை அவர் தான் பார்த்துக் கொள்கிறார்.
கஷ்டத்தில் இருந்தபோது ஒரு மிட்டாயில் இருந்து, நான் ஆசைப்பட்ட எதுவும் கிடைக்கவில்லை. அதனால், வாழ்க்கையில் எதற்குமே ஆசைப்படக்கூடாது என முடிவெடுத்தேன்.
இப்போது நல்ல நிலையில் இருந்தும், ஆசை என எதுவும் இல்லை. பெண்களுக்கு சுய சம்பாத்திய வைராக்கியம் நிச்சயம் வேண்டும்.