Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பேரன்பை என்னிடம் கொண்டு சேர்த்த தமிழுக்கு வணக்கம்!

பேரன்பை என்னிடம் கொண்டு சேர்த்த தமிழுக்கு வணக்கம்!

பேரன்பை என்னிடம் கொண்டு சேர்த்த தமிழுக்கு வணக்கம்!

பேரன்பை என்னிடம் கொண்டு சேர்த்த தமிழுக்கு வணக்கம்!

PUBLISHED ON : ஜூன் 08, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழ் இலக்கிய உலகின் தனித்த அடையாளம், முன்னாள் பேராசிரியர், ஓய்வு பெற்ற மாநில தகவல் ஆணையர், சென்னை கம்பன் கழகத்தின் இணை செயலர் என பல ஆளுமைக்கு சொந்தக்காரரான முனைவர் சாரதா நம்பி ஆரூரன்:

தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகளாரின் மகள் வயிற்று பேரனான நம்பி ஆரூரனை மணந்தேன். தமிழ் படித்த பெண், தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகிறார் என்பது குறித்து என் மாமியாருக்கு பெருமகிழ்ச்சி.

என்னிடம் பேச்சாற்றல் இருக்கிறது என்பதை என் மாமனார் தான் கண்டறிந்தார். பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலம் குன்றத்துார்.

அங்கே ஒவ்வொரு ஆண்டும் சேக்கிழார் விழா நடைபெறும். அதை, ஒரு குடும்ப விழாவாக நாங்கள் எடுத்து செய்வோம். அப்படி ஒரு முறை நடைபெற்ற சேக்கிழார் விழாவில் பேசுவதற்கு, என் மாமனார் என்னை அழைத்தார்.

சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் தலைமை வகித்தார். திருவந்தாதி பாடல்களைப் பாடி, அதற்கான விளக்கங்களை நான் கொடுத்த விதம், ம.பொ.சி.,-க்கு மிகவும் பிடித்து விட்டது.

தமிழ் புலமை, இசையாற்றல் ஆகிய இரண்டையும் இணைத்து இசை பேருரை நிகழ்த்துமாறு அவர் என்னை ஊக்கப்படுத்தியது, என் வாழ்வின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தமிழை போலவே, இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய வானொலியில், 'பி' கிரேடு ஆர்ட்டிஸ்ட்டாக பாடிக் கொண்டிருந்த சமயம் அது.

லண்டனில் வரலாறு சார்ந்த ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள, என் கணவருக்கு பிரிட்டிஷ் கவுன்சில் உதவித்தொகை கிடைத்தது. குடும்பத்துடன் நாங்கள் லண்டன் செல்ல வேண்டிய சூழல்.

லண்டன் பி.பி.சி.,யில், 'தமிழோசை' என்ற நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இசையையும், தமிழையும் இணைத்து, 1972 - 1976-ம் ஆண்டு வரை நான் வழங்கிய அந்த நிகழ்ச்சி, தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புற்றுநோய் பாதிப்பால் என் கணவர் காலமான பின், என் இரண்டு மகள்களையும் ஒற்றை பெற்றோராக வளர்த்து வந்தேன்.

ஆனால், சற்றும் எதிர்பாராத வண்ணம் என் இளைய மகள் உடல்நலக்குறைவால் இறந்தவுடன் நிலைகுலைந்து போனேன். அவள் காலமான ஓராண்டுக்குள், இலங்கையில் ஆன்மிக சொற்பொழிவுக்கு போகும் வாய்ப்பு கிட்டியது.

மகளை இழந்து தவித்திருந்த அச்சமயத்தில், இலங்கை தமிழர்கள் பட்ட துன்பங்களையும், துயரங்களையும், பொருளாதார சேதத்தையும், உயிர் சேதத்தையும் நேரில் கண்டபோது நொறுங்கி போனேன்.

அவர்களது நிலையை பார்த்தபோது, என் துக்கமெல்லாம் அதற்கு முன் ஒன்றுமே இல்லை என்பது போல எனக்கு தோன்றியது. என் வாழ்வை மாற்றிய பயணம் அது.

தமிழகம் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள தமிழ் சொந்தங்கள் என்னை, 'அக்கா, அம்மா' என்று அழைத்து பாசம் காட்ட, தமிழே காரணம். இந்த பேரன்பை எல்லாம் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த எம்மொழிக்கு, தமிழ் வணக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us