/தினம் தினம்/சொல்கிறார்கள்/ படுகர் இனத்தின் சாதனையாகவே அமைந்துள்ளது! படுகர் இனத்தின் சாதனையாகவே அமைந்துள்ளது!
படுகர் இனத்தின் சாதனையாகவே அமைந்துள்ளது!
படுகர் இனத்தின் சாதனையாகவே அமைந்துள்ளது!
படுகர் இனத்தின் சாதனையாகவே அமைந்துள்ளது!
PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

நீலகிரி மண்ணின் மைந்தர்களான, 'படுகர்' சமூகத்தில் இருந்து, விமான ஓட்டும் முதல் பெண் பைலட்டாக உருவெடுத்துள்ள 27 வயதான எம்.எம்.ஜெயஸ்ரீ:
'பிரைவேட் பைலட் லைசென்ஸ்' எனும் விமான ஓட்டி உரிமம் பெற்றிருக்கிறேன்.
கோத்தகிரி அருகே இருக்கும், 'குருக்கத்தி' கிராமம் தான் என் சொந்த ஊர். நான் வசித்த பகுதியில், பயிற்சி விமானங்களும், பாதுகாப்பு துறை விமானங்களும் அடிக்கடி வானில் வட்டமடிப்பதை ஆர்வத்துடன் பார்த்ததால், எனக்கும் சிறு வயதிலேயே, விமான ஓட்டியாக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால், நான் வாழ்ந்த கிராமத்திலிருந்த எவருக்கும், 'பைலட்' ஆவதற்கு என்னென்ன முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை.
எனக்கு உரிய வழிகாட்ட எவருமில்லாத சூழலில், என்னுடைய பைலட் கனவு மனதுக்குள்ளேயே கனன்று கொண்டிருந்தது.
நான் பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும், எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை கோவையிலும் முடித்தேன். நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடந்து பணிபுரிவது எனக்கு பிடிக்கவில்லை. ஆற்றல் மிக்க பணி செய்யவே விருப்பம் கொண்டிருந்தேன்.
அதனால், எனக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ள துறையையே தேர்ந்தெடுக்க விரும்பினேன். எனவே, நான் பார்த்து கொண்டிருந்த வேலையை தொடர்வதா? இல்லா விட்டால், என்னுடைய லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை எடுப்பதா? என்று யோசித்தேன். இறுதியில், பைலட் ஆகும் முடிவையே தேர்ந்தெடுத்தேன்.
பைலட் ஆவது தொடர்பாக இணையத்தில் ஆராய்ச்சி செய்தேன். நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களுடன் ஆலோசனை செய்தேன்.
பின், தென்னாப்ரிக்காவில் உள்ள ஜோஹன்னஸ்பர்க்கில் இருக்கும் பயிற்சி நிறுவனத்தில், விமானம் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டேன்.
பயிற்சியின்போது, எழுத்து தேர்வுகள் எட்டிலும், இரண்டு வாய்மொழி தேர்வுகளிலும் வெற்றி பெற்று, வானில் பறக்கும் பயிற்சியையும் 70 மணி நேரம் மேற்கொண்டேன்.
தொடர்ந்து, 'கமர்ஷியல் பைலட்' லைசென்ஸ் பெறும் பயிற்சி திட்டத்தில் இருக்கிறேன். அதற்காக, நான் 250 மணி நேரம் பறக்கும் பயிற்சியும், 10 தேர்வுகளில் வெற்றியும் பெற வேண்டி இருக்கும்.
என் சமுதாயத்தில் பெண்களை வேறு ஊர்களுக்கு அனுப்பி படிக்க வைப்பது என்பது அரிதாகவே இருக்கும். அந்த சூழலில் தான் என்னுடைய குடும்பத்தினர் வெளிநாட்டிற்கே என்னை அனுப்ப முன்வந்திருக்கின்றனர். இதுவே மிகவும் முற்போக்கான செயலாக பார்க்கப்படுகிறது.
என் சமூகத்தில் பல பெண்களுக்கும் ஒரு ரோல் மாடலாகவே இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை.
என் சாதனை, தனிப்பட்ட ஒரு பெண்ணின் சாதனையாக அல்லாமல், ஒட்டுமொத்த படுகர் இனத்தின் சாதனையாகவே அமைந்துள்ளது.