/தினம் தினம்/சொல்கிறார்கள்/ புத்தக வாசிப்பை மாணவர்கள் நேசிக்க பொம்மலாட்டம்! புத்தக வாசிப்பை மாணவர்கள் நேசிக்க பொம்மலாட்டம்!
புத்தக வாசிப்பை மாணவர்கள் நேசிக்க பொம்மலாட்டம்!
புத்தக வாசிப்பை மாணவர்கள் நேசிக்க பொம்மலாட்டம்!
புத்தக வாசிப்பை மாணவர்கள் நேசிக்க பொம்மலாட்டம்!
PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

புதுக்கோட்டை மாவட்டம், மாப்பிள்ளையார்குளம் மச்சுவாடி பகுதியில், பாரதியார் பாடல்களை பாடியபடி கும்மியடித்து வலம் வரும் பட்டதாரி தமிழாசிரியை யுனைசி கிறிஸ்டி ஜோதி: புதுக்கோட்டையில் உள்ள டி.இ.எல்.சி., நடுநிலை பள்ளியில் பணியாற்றி வருகிறேன்.
கொரோனா காலகட்டத்தில், முதன் முதலில் அவ்வையார் வேடமிட்டு மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அப்போது, மாணவர்கள் கையில் நெல்லிக்கனிகளை கொடுத்ததுடன், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் சொன்னேன்.
கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தினேன். இதையடுத்து பள்ளி திறக்கப்பட்டபோது, 55 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்தனர்.
அதனால், இந்த ஆண்டும் புதிதாக வேடமணிந்து முயற்சி செய்யலாம் என்று யோசித்தேன். அதன்படி, பாரதியார் வேடமிட்டு கும்மியடித்து, பாட்டு பாடி, பல இடங்களுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். என் இந்த முயற்சிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தருகிறது.
பாரதியாரின் பாடல்கள் கருத்தாழம் மிக்கவை. அவை எல்லா சூழலுக்கும் பொருந்தக்கூடியவை என்பதால், பாரதியார் பாடலை தேர்ந்தெடுத்தேன். அதையும்கூட பாரதியார் வேடமணிந்து சொன்னால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன்.
மாணவர்கள் ஆமை வேடமிடும்போது, 'ஆமைகள் நம் வீட்டுக்குள் நுழைவது நல்லதல்ல என்று சொல்வது சரியல்ல. மாறாக, கல்லாமை, இயலாமை, முயலாமை போன்ற ஆமைகள் தான் வீட்டுக்குள் வரக்கூடாது. நீர் வாழ் உயிரினமான ஆமை, நம் வீட்டிற்குள் வருவது ஒன்றும் தவறில்லை' என்று எடுத்து சொல்வேன்.
பொம்மலாட்டம் வாயிலாக குழந்தைகளை குதுாகலிக்க செய்வது எனக்கு கைவந்த கலை. புத்தக வாசிப்பை மாணவர்கள் மத்தியில் கொண்டு வருவதற்காக, பொம்மலாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
தவிர, கதை சொல்வது, வில்லுப்பாட்டு போன்றவற்றிலும் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. இசை வழியாக இலக்கண வகுப்புகளும் நடத்தி வருகிறேன்.
இல்லற வாழ்க்கையில் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், மாமியார் - மருமகள் உறவு எவ்வாறு இருக்க வேண்டும்.
கணவன் - மனைவி எவ்வாறு வாழ வேண்டும், பெற்றோர் - குழந்தைகள் உறவு நிலை எவ்வாறு இருக்க வேண்டும், முதுமையில் பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து, 'மலரின் ஒளி' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளேன்.
தமிழக அரசின், 'காலை உணவுத் திட்டம்' பற்றியும், 'கல்வித் தொலைக்காட்சி' பற்றியும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் எனக்கு கணவர் மற்றும் பிள்ளைகளின் முழு ஒத்துழைப்பு இருக்கிறது. என் செயல்பாடுகளை பாராட்டி, பல விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.