/தினம் தினம்/சொல்கிறார்கள்/ ஏலக்காய் சாகுபடியில் ரூ.10.50 லட்சம் கிடைக்கும்! ஏலக்காய் சாகுபடியில் ரூ.10.50 லட்சம் கிடைக்கும்!
ஏலக்காய் சாகுபடியில் ரூ.10.50 லட்சம் கிடைக்கும்!
ஏலக்காய் சாகுபடியில் ரூ.10.50 லட்சம் கிடைக்கும்!
ஏலக்காய் சாகுபடியில் ரூ.10.50 லட்சம் கிடைக்கும்!
PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM

இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி செய்து வரும், நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரகுநாதன்: எனக்கு பூர்வீகம் இந்த ஊர் தான். 17 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி 1996ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், இந்த 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். 1.5 ஏக்கரில் சவ்சவ் பயிரிட்டேன்.
அறுவடை நேரத்தில் யானைக் கூட்டம் எங்கள் நிலத்தில் புகுந்து, மொத்த தோட்டத்தையும் சீரழித்து விட்டது.
காய்கறிகள் சாகுபடி செய்தால், அவற்றின் வருகையை கட்டுப்படுத்துவது கஷ்டம் என புரிந்து, காபி பயிர் சாகுபடி செய்தேன். அதில் நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைத்தது. 2019 வரை காபி தவிர, வேறு எந்த பயிரும் சாகுபடி செய்யவில்லை.
இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் வாயிலாக, 100 ஏலக்காய் நாற்றுகள் கிடைத்தன. 'எங்கள் பகுதிக்கு ஏலக்காய் சாகுபடி சாத்தியமா' என, தோட்டக்கலை அதிகாரிகளிடம் விசாரித்ததில், 'சரியான பராமரிப்பு இருந்தால் நன்கு விளையும்' என்று கூறியதால், ஏலக்காய் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.
ஏலக்காய்க்கு ஊடுபயிராக காபி செடிகளை வைத்துள்ளேன். தவிர சில்வர் ஓக் மற்றும் காட்டு முருங்கை மரங்களையும் ஆங்காங்கே வைத்துள்ளேன்.
தற்போது 14,000க்கும் மேற்பட்ட செடிகள் செழிப்புடன் வளர்ந்து, மகசூல் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இரண்டு முறை அறுவடை செய்ததில், 16 கிலோ கிடைத்துள்ளது.
அதை உலர வைத்த பின், 4 கிலோ உலர் ஏலக்காய் கிடைத்தது. அதை இருப்பு வைத்துள்ளேன். ஏலக்காயில் அதிக மகசூல் கிடைக்க வேண்டுமெனில், 50 சதவீத நிழல் தேவை; ஆனால், நிழலுக்கான கட்டமைப்பை இன்னும் முழுதாக ஏற்படுத்தவில்லை.
முதல் முறை பூ பிடிக்கிறப்போ எல்லாவற்றையும் நறுக்கி விட்டால், அடுத்த முறை அதிக அளவில் பூ பிடிக்கும்; இது தெரியாமல், பூக்களை அப்படியே விட்டு விட்டேன். அதனால், முதன்முறை குறைவான மகசூல் கிடைச்சிருக்குன்னு தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, நிழல் தேவைக்காக அதிக மரங்களை வளர்க்க ஆரம்பித்துள்ளேன். அதனால், இனி வரும் நாட்களில் படிப்படியாக மகசூல் அதிகரிக்கும் என, ஏலக்காய் சாகுபடியில் அனுபவம் பெற்ற விவசாயிகள் கூறுகின்றனர். இந்த 3.5 ஏக்கர் பரப்பில் மொத்தம், 700 குழிகளில் ஏலக்காய் செடிகள் வளர்கின்றன.
ஒவ்வொரு குழிக்கும் தலா 1 கிலோ உலர்ந்த ஏலக்காய் கிடைத்தாலே, மொத்தம் 700 கிலோ கிடைக்கும். கிலோவுக்கு குறைந்தபட்சம் 1,500 ரூபாய் வீதம் விலை கிடைத்தாலே, 700 கிலோ ஏலக்காய் விற்பனை வாயிலாக, ஓராண்டுக்கு 10 லட்சத்து 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
தொடர்புக்கு: 63801 54288.