/தினம் தினம்/சொல்கிறார்கள்/ ஊனங்கள் எவரையும் முடக்கி போட்டுவிட முடியாது! ஊனங்கள் எவரையும் முடக்கி போட்டுவிட முடியாது!
ஊனங்கள் எவரையும் முடக்கி போட்டுவிட முடியாது!
ஊனங்கள் எவரையும் முடக்கி போட்டுவிட முடியாது!
ஊனங்கள் எவரையும் முடக்கி போட்டுவிட முடியாது!
PUBLISHED ON : ஜூன் 21, 2024 12:00 AM

சமூக செயற்பாட்டாளர், நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், மாடல், பாடகர், ஓவியர், தன்னம்பிக்கை பேச்சாளர் என, பல முகங்கள் கொண்ட, பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த முனிபா மஸாரி:
நான், பாகிஸ்தானில் இருக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள். நானும், என் கணவரும் 2008-ல் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராமல் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்தேன்; என்னுடைய பல எலும்புகள் உடைந்தன.
மூன்று பெரிய அறுவை சிகிச்சைகளும், இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகளும் எனக்கு நடந்தன. விபத்தின் பாதிப்பால் என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது. இதையே காரணம் காட்டி, கணவர் விவாகரத்து செய்து விட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்தாக வேண்டிய சூழல். கடுமையான, 'பிசியோதெரபி' பயிற்சிகளுக்கு பின், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இயங்கும் அளவுக்கு தேறினேன்.
சக்கர நாற்காலியே கதியென இருந்த பின், ராவல்பிண்டிக்கு இடம்பெயர்ந்தேன். 2011ல், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொண்டேன்.
மூலையில் முடங்கி விடாமல், நடிப்பு, மாடலிங், சமூக செயல்பாடுகள், நிகழ்ச்சி தொகுப்பு, பாடல் மற்றும் உத்வேக பேச்சு என, பல துறைகளிலும் ஈடுபட்டேன்; புகழடைந்தேன்.
மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருந்தபோதே, கேன்வாஸ் துணிகளில் அக்ரிலிக் ஓவியங்கள் வரைய துவங்கினேன். என் ஓவியங்கள் லாகூர் கண்காட்சிகளிலும், துபாயில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியிலும் இடம்பெற்றன. பல சேவை நிறுவனங்களுக்காகவும் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறேன்.
கடந்த, 2014-ல், 'க்ளவுன் டவுன்' என்ற படத்திலும் பணிபுரிந்தேன். பாண்ட்ஸ் நிறுவனம், 'பாண்ட்ஸ் மிராக்கிள் வுமன்' என்ற விருதை கொடுத்து கவுரவித்தது.
'டோனி அண்ட் கை' என்ற சர்வதேச சிகையலங்கார நிலையத்தால், 'ஆசியாவிலேயே சக்கர நாற்காலியை பயன்படுத்தும் முதல் மாடலாக' தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
கடந்த 2015-ல், பிபிசி நிறுவனம், 'உத்வேகம் அளிக்கும் 100 பெண்கள்' பட்டியலில் என்னையும் சேர்த்து, கவுரவித்திருக்கிறது. அதை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின், பெண்கள் பாகிஸ்தானுக்கான தேசிய துாதரானேன்.
'உலகின் செல்வாக்குமிக்க, 500 முஸ்லிம்களில் ஒருவர்' என்ற விருதும், 'கரிக் பவுண்டேஷன்' என்ற அமைப்பின் வாயிலாக, 2017-ம் ஆண்டுக்கான கரிக் சகோதரர்கள் விருதும் எனக்கு கிடைத்திருக்கின்றன.
தன்னம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகள் பலவற்றையும் நிகழ்த்தி, பலருடைய வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தி வருகிறேன். உங்கள் சொந்த வாழ்க்கை கதையின் ஹீரோ நீங்கள் மட்டுமே; ஹீரோக்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை!
ஊனங்கள் எவரையும் முடக்கிப் போட்டுவிட முடியாது!