/தினம் தினம்/சொல்கிறார்கள்/ மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும்! மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும்!
மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும்!
மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும்!
மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும்!
PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM

பளு துாக்கும் போட்டியில் பங்கேற்று, 50 கிலோ துாக்கி சிறப்பு பரிசு பெற்ற, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த, 82 வயதாகும் கிட்டம்மாள்:
என் சொந்த ஊரு, பொள்ளாச்சி. கணவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எங்க வீட்டில் மாசத்துல ஒண்ணு, ரெண்டு நாள் தான் வெள்ளை அரிசி சாதம்; மற்ற நாட்களில் கம்மஞ்சோறு, ராகி களி, சோளச் சோறு, வரகு, தினை, சாமை சாதம், கொள்ளுப் பருப்பு, தட்டைப் பயறு, நாட்டுக் காய்கறிகள் தான் சாப்பிடுவோம்.
திருமணமாகி கணவர் வீட்டுக்கு வந்த அப்புறமும், எங்கள் வீட்டு சமையல் முறையை தான் பின்பற்றினேன். காலையில் சத்துமாவு கஞ்சி, மதியம் குறைவான அளவு சோறு, அதிகமா காய்கறிகள், முட்டை, சாயங்காலம் கண்டிப்பா சூப், இரவு இட்லி அல்லது தோசை என, கடந்த 60 ஆண்டுகளாக இப்படித்தான் சாப்பிட்டுட்டு வர்றேன்; காபி, டீ குடிக்க மாட்டேன்.
என் பேரன்கள் காலையில ஜிம்முக்கு போவாங்க. அதனால், அதிகாலையிலேயே எழுந்து அவங்களுக்கு சுண்டல், பால், சத்து மாவு கஞ்சி என செய்து கொடுப்பேன்.
ஜிம்மில் அவர்கள் செய்யும் பயிற்சி வீடியோக்களை என்னிடம் பேரன்கள் காட்டும்போது, 'நாமும் இதுபோன்று செய்து பார்க்கலாம்' என, தோன்றியது. பேரன்களிடம் என் ஆசையை கூறிய போது, அவர்கள் உடனே என்னை ஜிம்முக்கு அழைத்து சென்றனர்.
எனக்கு, 82 வயது என்பதால், ஜிம் மாஸ்டர் எளிய பயிற்சிகளாக தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால், 'பேரன்கள் மாதிரி நானும் வெயிட் லிப்டிங் செய்யணும்' என, அவரிடம் கூறினேன்.
அவர் என் மேல நம்பிக்கை வைத்து, 20 கிலோவை துாக்க சொன்னார். அதை எளிதாக செய்யவே, சிறிது சிறிதாக வெயிட்டை அதிகப்படுத்தினார். தற்போது, 50 கிலோ வரை துாக்குறேன்.
சமீபத்தில், கோவையில நடந்த வெயிட் லிப்டிங் போட்டிக்கு, பேரன்களும், சிலரும் சென்றனர். நானும் சென்றேன். போட்டியில எடை துாக்குவதைப் பார்த்து, 'நானும் அதில் கலந்து கொள்ளலாமா' என, எங்கள் ஜிம் மாஸ்டரிடம் கேட்டேன். அவர் போட்டி நிர்வாகிகளிடம் பேசி, என்னை மேடை ஏற்றினார்.
அனைவரும் வியக்கும் வண்ணம், நான், 47 கிலோ எடையை அசால்டா துாக்கிட்டேன். அதற்காக எனக்கு சிறப்புப் பரிசு கொடுத்தனர். அதற்கு பின், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில நடந்த போட்டியில் பங்கேற்று, 50 கிலோ துாக்கி சிறப்பு பரிசு பெற்றேன்.
சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தப் பிரச்னை என எதுவும் இல்லை. தலைவலி, வயித்து பிரச்னைக்கும் வீட்டு வைத்தியம் தான். வயதானாலும், அத்தியாவசிய தேவை தவிர எல்லாவற்றுக்கும் நாம் யாருடைய உதவியையும் எதிர்பார்த்து காத்திருக்க கூடாது.
முடிந்த வரை நம் வேலைகளை நாமே செய்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில், 'நம்மால் எதையும் செய்ய முடியும்' என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.