/தினம் தினம்/சொல்கிறார்கள்/ குடும்பத்தினர் ஆதரவு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டேன்! குடும்பத்தினர் ஆதரவு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டேன்!
குடும்பத்தினர் ஆதரவு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டேன்!
குடும்பத்தினர் ஆதரவு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டேன்!
குடும்பத்தினர் ஆதரவு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டேன்!
PUBLISHED ON : ஜூன் 19, 2024 12:00 AM

தொடர்ந்து, 24 ஆண்டு களாக செய்தி வாசிப்பாளராக பணிபுரியும், சுஜாதா பாபு:
கரூர் தான் சொந்த ஊர். அப்பா ஸ்டேட் பேங்கில் வேலை பார்த்தவர்; அம்மா இல்லத்தரசி. அப்பாவிற்கு இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை, 'டிரான்ஸ்பர்' வரும்.
எந்த ஊருக்கு மாற்றலாகி சென்றாலும், அரசு பள்ளியில் தான் சேர்த்து விடுவார். பிளஸ் 2 வரை கிராமங்களில் வளர்ந்து, முழுக்க முழுக்க தமிழ் வழியிலேயே படித்ததால், எனக்கு எளிதாக தமிழ் வந்து விட்டது.
கணவர் பாபு ரமேஷ், துார்தர்ஷன் சேனலில் ஒளிப்பதிவாளராக இருந்தார். சென்னைக்கு குடிபெயர்ந்த சமயத்தில், ஏதேனும் வேலைக்கு செல்லலாம் என்று தான் நினைத்தேன்.
அதுவரை மீடியா குறித்து எதுவும் தெரியாது. கணவர் தான் ஊக்கப்படுத்தி, மீடியாவில் வேலைக்கு சேர சொன்னார்.
நிகழ்ச்சி தயாரிப்பாளர் போல், வேறு வேலையில் சேரலாம் என நினைத்த நான், எதிர்பாராமல் செய்தி வாசிப்பாளராகி விட்டேன்.
இந்த வேலையை நான் மிகவும் நேசித்து செய்கிறேன். ஒவ்வொரு நாளும் புதிய நாளை போல் உணர்கிறேன். 'ஷிப்ட்' இல்லாமல் வீட்டிலிருக்கும் சமயங்களில், 'எப்போது வேலைக்கு செல்வோம்; செய்தி வாசிப்போம்' என்றே நினைத்துக் கொண்டிருப்பேன்.
மகிழ்ச்சியோ, துக்க செய்தியோ வாசிக்கும் போது, செய்தியாக மட்டும் தான் சொல்ல வேண்டும்; ஆனால், அதையும் மீறி சில செய்திகள் உள்ளார்ந்து பாதிப்பை உண்டாக்கி விடும்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சுனாமி, மழை வெள்ள பாதிப்பு, பாலியல் பலாத்காரம் போன்ற சில செய்தி களை வாசிக்கும் போது ஒரு வித வருத்தம், வெறுப்பு, பயம் ஏற்படும்.
எந்த வேலையாக இருந்தாலும், நாம் சிறப்பாக செய்தால் நமக்கான அங்கீகாரம் தேடி வரும். முழு சிரத்தையுடன், அர்ப்பணிப்பாக 100 சதவீதம் வேலை செய்தால், எதிலும் வெற்றி கிடைக்கும்.
கடந்தாண்டு முதல், தமிழக அரசின் செய்தித் துறை, சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது கொடுக்க துவங்கியிருக்கிறது. முதலாம் ஆண்டுக்கான விருதாளர்கள் நான்கு பேரில் நானும் ஒருவர்.
சில குறும் படங்களிலும் நடித்திருக்கிறேன். மாற்று பாலினத்தவர்களை பெற்றோர் எப்படி புரிந்து கொண்டு, ஆதரவு தர வேண்டும் என்ற, 'கான்செப்ட்'டில் நானே இயக்கி நடித்த, 'மனோகரி' குறும்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
என் குடும்பத்தினர் சப்போர்ட் இல்லாவிட்டால், இந்த அளவிற்கு வந்திருக்க மாட்டேன். கணவர் குடும்பத்தினரும் சரி, என் பெற்றோரும் சரி... எப்போதும் எனக்கு ஒத்துழைப்பு தருவோராக தான் இருக்கின்றனர்.