தினமும் 1,000 கிலோ வர்க்கி விற்பனை!
தினமும் 1,000 கிலோ வர்க்கி விற்பனை!
தினமும் 1,000 கிலோ வர்க்கி விற்பனை!
PUBLISHED ON : ஜூன் 12, 2024 12:00 AM

கடந்த, 40 ஆண்டுகளாக மூன்று தலைமுறையாக வர்க்கி தயாரிப்பில் ஈடுபட்டு வரும், நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்த, 'இந்தியன் பேக்கரி'யை நிர்வகித்து வரும், பாலசுப்பிரமணியம் - ஜெயகுமார் சகோதரர்கள்:
பாலசுப்பிரமணியம்: குன்னுார் தான் எங்கள் பூர்விகம். 1983ல் இந்த ஊரில் எங்கப்பா காபி ஷாப் ஆரம்பித்தார். அதன்பின், 1985ல் இந்த பேக்கரியை ஆரம்பித்தார். அவருக்கு உதவியாக நானும் இந்த தொழிலில் இருந்தேன்.
வர்க்கி தயாரிக்கிற ஒருவரிடம் இருந்து எங்கள் பேக்கரிக்கு தேவையான வர்க்கியை வாங்கி விற்பனை செய்தோம். ஒரு கட்டத்தில் இதன் தேவை அதிகமானதால், வர்க்கியை நாங்களே தயாரிக்க ஆரம்பித்தோம்.
இங்கு உள்ள பல பேக்கரிகளில், மைக்ரோவேவ் ஓவனில் வர்க்கி தயாரிக்க மாறினர். ஆனால், நாங்கள் இப்போது வரை விறகடுப்பில் தான் தயாரிக்கிறோம். இதில் தயாரிக்கிற வர்க்கியின் சுவை அதிகமாக இருப்பதுடன், ஓரிரு தினங்கள் கூடுதலாக வைத்திருந்தும் பயன்படுத்தலாம்.
எனவே, விறகடுப்பில் தயாரித்த வர்க்கியை தான் பலரும் விரும்புகின்றனர். இதற்கான அடுமனை, மாட்டு வண்டியின் கூண்டு மாதிரி இருக்கும். இதற்குள் அதிக அளவிலான விறகுகளை எரித்து, 140 டிகிரி செல்ஷியல் வெப்பநிலை உருவாக்கப்படும்.
தயார் செய்துள்ள மாவை அடுமனை கூண்டில் ஒன்றரை மணி நேரத்துக்கு வைத்திருப்போம். கூண்டுக்குள் நிலவும் அனலிலேயே ஒன்றரை மணி நேரத்திற்கு வைத்திருப்போம். அந்த அனலிலேயே வர்க்கி தயாராகி விடும்.
ஜெயகுமார்: வர்க்கி தயாரிக்க மைதா, வனஸ்பதி, சர்க்கரை, தண்ணீர், ஈஸ்ட் தேவை. வர்க்கியை வேக வைப்பதற்கு பல மணி நேரத்திற்கு முன் தேவையான பொருட்களை சேர்த்து, மாவை பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.
நார்மல் வர்க்கி, மசால் வர்க்கி, ஸ்கொயர் வர்க்கி, சின்ன சைஸ் வர்க்கி என நான்கு விதங்களில் தயாரிக்கிறோம். கிலோ 220 ரூபாய்க்கு விற்கிறோம். இது தவிர, பிஸ்கட், பிரெட், கேக், சாக்லேட், ஸ்வீட்ஸ் உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகையிலான பேக்கரி உணவுகளையும் தயாரிக்கிறோம்.
எங்களிடம், 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். உள்ளூர், வெளியூர் என அனைத்து பகுதிகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
எங்கள் நிறுவனம் சார்பில் குன்னுாரில் மூன்று பேக்கரிகள் செயல்படுகின்றன. எங்களின் மூன்று பேக்கரிகளிலும் தினமும் 1,000 கிலோ வர்க்கி விற்பனை நடைபெறுகிறது.
ஆண்டுக்கு 6 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' நடக்கிறது. தற்போது ஊட்டியிலும் பேக்கரி ஆரம்பிக்க போகிறோம். அதற்கான முயற்சிகளை எங்கள் இருவரின் மகன்கள் தான் எடுத்து வருகின்றனர்.