/தினம் தினம்/சொல்கிறார்கள்/ விழி சவாலுக்கும் இட ஒதுக்கீடு தந்தால் நன்றாக இருக்கும்! விழி சவாலுக்கும் இட ஒதுக்கீடு தந்தால் நன்றாக இருக்கும்!
விழி சவாலுக்கும் இட ஒதுக்கீடு தந்தால் நன்றாக இருக்கும்!
விழி சவாலுக்கும் இட ஒதுக்கீடு தந்தால் நன்றாக இருக்கும்!
விழி சவாலுக்கும் இட ஒதுக்கீடு தந்தால் நன்றாக இருக்கும்!
PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

மதுரை, பரவையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் கற்று தரும் ஆசிரியர் அந்தோணி அதீஸ்: 'குறைகளை நிறைகள் கொண்டு பூரணமாக்கு' என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.
சிலம்பம் விளையாடுபவர்கள் கண்களை கட்டி கொண்டு ஆடுவதை பார்த்திருக்கிறோம், ஆனால், பார்வை குறைபாடு கொண்டவர்கள் சிலம்பம் விளையாடினால் எப்படி இருக்கும் என்ற என் கனவை என் மாணவர்கள் நிறைவேற்றி பெருமை சேர்த்திருக்கின்றனர்.
மதுரை மாவட்டம், பரவையில் உள்ள ஜோசப் பார்வையற்றோர் சிறப்பு பள்ளியில் பிளஸ் 1 பயிலும் ஐந்து மாணவர்கள், என் பயிற்சியால் சிலம்பாட்டத்தில் வித்தைகள் காட்டி மெய்சிலிர்க்க வைக்கின்றனர்.
நான் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீனவ குடும்பத்தை சேர்ந்தவன். சின்ன வயதிலிருந்து சிலம்பத்தில் ஆர்வம் அதிகம்.
ஸ்டேட் பிளேயரான டொமினிக் மாஸ்டரிடமும், முருகானந்தம் மாஸ்டரிடமும் பழகினேன். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலம்பத்தில் டிப்ளோமாவும் முடித்தேன்.
தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையை எல்லாருக்கும் கற்றுக்கொடுக்க முடிவு செய்து, 'நெய்தல் காப்பான்' என்ற பெயரில் சிலம்ப பள்ளியை துவங்கி பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் என, தீவுப் பகுதியில் கற்று கொடுக்க துவங்கினேன்.
கடலுக்குள் மீன்பிடிக்க செல்வது, கரைக்கு வந்து சிலம்பம் சொல்லிக் கொடுப்பது என, வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோது, பார்வையற்றவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுத்து அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடிவு செய்தேன். இதற்கு, இந்த பள்ளியின் முதல்வரும் அனுமதி அளித்தார்.
ஆர்வமுள்ள மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் அனுமதி பெற்று, எந்த கட்டணமும் வாங்காமல், ஐந்து மாணவர்களுக்கு பயிற்சியை துவங்கினேன்.
சிலம்ப குச்சியை பார்த்திராத, அதை விரல்களால் சுழற்றுவதை பார்க்க முடியாத நிலையிலுள்ள அம்மாணவர்கள், நான் வாயால் சொல்வதை உள்வாங்கி, கம்புகளை சுழற்ற துவங்கினர்; அவர்களின் ஆர்வமும், வேகமும் ஆச்சரியப்படுத்தியது.
கடந்த ஓராண்டாக கற்று, சிறந்த சிலம்ப வீரர்களாக மாறிவிட்டனர். சிலம்பத்துக்கு விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு உள்ளது. அதில் விழி சவால் கொண்டவர்களுக்கும் தனியாக வாய்ப்பு அளித்தால், இவர்களின் உயர்கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
தற்போது இந்த மாணவர்கள், 'குச்சியை வைத்து விளையாடும் ஆட்டம் என்பதால், உடம்பில் பட்டு காயமாகும் என்று சிலர் கூறினர். ஆனால், மாஸ்டர் பொறுமையாக சொல்லி தந்தார்.
மற்றவர்கள் போல எங்களாலும் ஆட முடியும் என்பதை நிரூபிக்கவே கற்றுக் கொண்டோம்' என, தங்கள் நண்பர்களிடம் கூறுவது எனக்கு பெருமையாக இருக்கிறது.