PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தமிழக முதல்வராக
பொறுப்பேற்ற, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அவரது
அமைச்சரவையினருக்கும், உளப்பூர்வமான வாழ்த்துகள். தி.மு.க., - அ.தி.மு.க.,
அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து, தமிழகத்தை ஆளவிருப்பதில்
மகிழ்கிறேன். ஆனா, அதே திராவிட கட்சிகள்ல இருந்து, 'பதவி கிடைக்கல'ன்னு
வந்தவங்களை வச்சு தான் இந்த ஆட்சியே நடக்குதுங்கிற 'சின்ன' மேட்டரை அண்ணன்
மறந்துட்டாரா?
தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அறிக்கை: உலகளாவிய சவாலான சூழ்நிலையில், நாட்டை வலுப்படுத்தும்நோக்கில் பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எரிபொருள், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதுடன், சுதேசி பொருட்களை பயன்படுத்தி, கூட்டு பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இவை தான், நாட்டின் நிலைத்தன்மையை வலுப்படுத்தி, சுயசார்பு இந்தியாவை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்.
நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்காக சிக்கன வாழ்க்கை முறையும், சுதேசி பொருட்களின் பயன்பாடும் காலத்தின் தேவையாகியுள்ளது. இதில், ஒவ்வொருவரின் பொறுப்புணர்வே சுயசார்பு இந்தியாவின் அடித்தளம் என்பதில் சந்தேகமே இல்லை.
பத்திரிகை செய்தி: தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிஅமைத்து ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டது. முதல்வர் பதவி கிடைக்கும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எல்லா திட்டத்துக்கும் சரி என்றார். ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாததால், வி.சி.க., தலைவர் திருமாவளவனை முதல்வராக்க திட்டமிடப்பட்டது. அதற்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை. இதனால், யாருக்கும் பதவி கிடைக்காமல், த.வெ.க., தலைவர் விஜய் முதல்வராகி விட்டார்.
தி.மு.,க-வும், அ.தி.மு.,க-வும் கூட்டணி வைக்க பார்த் தாங்கன்னு சொல்றதைக் கேட்டா, 'சிங்கமும் புலியும்சேர்ந்து ஆட்டைப்பிடிக்கப் போய், கடைசியில வேட்டைக்காரன் கிட்ட மாட்டிக்கிட்ட' கதைதான் ஞாபகம் வருது.
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் அறிக்கை: தமிழகத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா எவ்வித தவறும் செய்யாமல், காசு அடிக்காமல் முதல்வர் விஜய் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது நாட்டுக்கு ஆபத்தாகி விடும்.
அரசியலில் 'காசு அடிக்காமல் இருக்கணும்'னு ஆலோசனை சொல்வது நல்லது தான்... ஆனால் அது ஆதவ் அர்ஜுனாவுக்கு மட்டுமா, இல்ல எல்லா கட்சிகளுக்கும் பொதுவான சத்தியப்பிரமாணமா?
