PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

பா.ம.க., சட்டசபை கட்சித் தலைவர் சவுமியா பேட்டி: பா.ம.க.,வின் கொள்கையே
முழு மதுவிலக்கு தான். முதல் கட்டமாக 717 மதுக்கடைகளை மூடப்போவதாக,
முதல்வர் விஜய் அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. மதுக்கடைகளை மூடும்போது,
சின்ன சந்துகளில் இருக்கும் மதுக்கடைகளையும் திறக்காமல் பார்த்துக்கொள்ள
வேண்டும். அப்போது தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
பா.ம.க., கொள்கை தான் மதுவிலக்குன்னு சொல்லிட்டீங்க... இப்போ முதல்வர்
விஜயும் அதையே செய்றதால, 'நாங்க முன்னாடியே சொன்னோம்ல'ன்னு சொல்றதுக்கு
உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சிகளி ன் தலைவர்களை சந்தித்து, வாழ்த்துகளை பெறும் முதல்வர் விஜயின் அணுகுமுறை, அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும், அவரை வரவேற்ற ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை; ஆனால், மரியாதை மற்றும் நாகரிகம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த சந்திப்பு நல்ல முன்னுதாரணம்.
காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அறிக்கை: தமிழக அரசின் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும், 20 ரூபாய்க்கும் மேல் கடனுக்கான வட்டிக்கே செலவாகிறது. இது, மற்ற பெரிய மாநிலங்களை விட அதிகம். வட்டி, சம்பளம், ஓய்வூதியம் என, கட்டாய செலவுகளுக்கே 40 ரூபாய் போய் விடுகிறது. கஜானா காலியாக உள்ளது.
இந்த நிதி நெருக்கடி தெரியாம தான், கடந்த கால கூட்டணி அரசுல வாக்குறுதிகளை அள்ளி விட்டீங்களா?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: அ.ம.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகி களின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.எல்.ஏ.,வை, குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது, மக்கள் தீர்ப்பையும் ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தில் செயல்படும் துாய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல; யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
'ஜனநாயக மாண்பு'ன்னு நீங்க பேசும்போது, ஜெ., மறைவுக்கு பின், 2017ல் அ.தி.மு.க.,வுல உருவான ஓ.பி.எஸ்., அணி, சசிகலா அணிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியில, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மாற்று அணிக்கு தாவி விடக் கூடாதுன்னு, 'கூவத்தூர் ரிசார்ட்'ல அடைச்சு வெச்சு அரசியல் பண்ணது அப்படியே பிளாஷ்பேக்ல வந்துட்டுப் போகுதே... அதை எப்படி மறக்குறது?
