PUBLISHED ON : ஜூன் 18, 2025 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு: தமிழகத்தில்,
பாலா என்ற துணை நடிகர் உள்ளார்; அவர் கதாநாயகன் அல்ல. ஆனால், தான்
சம்பாதித்த பணத்தில் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார். ஆம்புலன்ஸ்
வாங்க உதவி புரிந்து வருகிறார். அவர் இதை ஷூட்டிங் நடத்துவதில்லை; இது
குறித்து ஷோ நடத்துவதில்லை. அகரம் பவுண்டேஷன் சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ்
ஆகியோர் எத்தனையோ உதவிகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் எப்போதும் ஷூட்டிங்
நடத்தவில்லை.
'வலது கை தருவது இடது கைக்கு தெரியாமல் இருக்கணும்'னு
சொல்லுவாங்க... ஆனா, முதல்வர் நாற்காலி கனவில் மிதக்கிறவங்களிடம் அதை
எதிர்பார்க்க முடியாது!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: 'தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொல்கிறார். தேவலோகமாக இருந்தாலும் துஷ்டர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ராவணன், சீதையை துாக்கிக்கொண்டு போகலையா? துஷ்டர்கள் இல்லாத சமுதாயம் உலகத்தில் இல்லை. வளர்ந்த சமுதாயத்தில் குற்றங்கள் நடக்கும். ஆனால், குற்றங்களை கண்டுபிடித்து உடனுக்குடன் அதை தடுத்தால் தான், அது நல்ல அரசு. அதை இந்த அரசு செய்கிறது.
இவருக்குதான் தேவலோகம், ராமாயணத்துல எல்லாம் நம்பிக்கை கிடையாதே... அப்புறம் ஏன் அதை உதாரணத்துக்கு இழுக்கிறாரு?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. அதற்கு காரணம், விளம்பரத்திற்காக போதை ஒழிப்பு செயல்பாடுகள் நடக்கின்றனவே தவிர, அதில் உண்மைத்தன்மை இல்லை. மொத்த வியாபாரியை குறி வைக்காமல், சில்லரை வியாபாரிகளை காண்பித்து, மக்களிடம் போதையை ஒழிக்கிறோம் என, அரசு பிதற்றிக் கொள்கிறது.
போதைப்பொருட்கள் ஒழிப்பில், அரசு செய்வதெல்லாம் தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிற கதைதான்!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள கொடூரமான ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட போர் மற்றும் காசா மீது போடப்படும் ஏவுகணை தாக்குதல்களை, இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையில், நாம் நடுநிலை வகிக்கிறோம். இந்நிலையில், ஒரு நாட்டிற்கு ஆதரவாக, மற்றொரு நாட்டிற்கு எதிராக, ஒரு மாநிலத்தின் முதல்வர் கருத்து சொல்வது, வெளிநாட்டு உறவை சிதைக்கும் முயற்சி என்றே தோன்றுகிறது.
தமிழக முதல்வர் கருத்து எல்லாம், நம்ம நாட்டுல இருக்கிற இஸ்ரேல் துாதரகத்தையாவது எட்டுமா என்பது கேள்விக்குரியது தான்!