PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி:பீஹாரை
பின்பற்றி, தமிழகத்திலும் மது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின்
கட்டாயம். பீஹாரிலும் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டன; ஆனால், அம்மாநில
அரசு, அதற்கு நிவாரணம் கொடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என மறுத்து
விட்டது. ஆனால், அரசே மதுக்கடைகளை முன்னின்று நடத்தும் தமிழகத்தில்,
கள்ளச்சாராய சாவிற்கு, 10 லட்சம் ரூபாய் வாரி வழங்கும் அவலநிலை உள்ளது.
'நாம
டாஸ்மாக் கடைகளை திறந்து வச்சிருந்தும், மக்கள் கள்ளச்சாராயத்தை தேடி
போயிட்டாங்களே' என்ற குற்ற உணர்ச்சியில், 10 லட்சம் ரூபாயை
கொடுத்திருப்பாங்களோ?
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: 'தமிழகத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை' என்று கூறுவது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு பழக்கமாகி விட்டது. அவர் எதைக் கூறினாலும், தமிழக மக்கள் நம்ப மாட்டர். பழனிசாமி விவசாயியே கிடையாது. தோளில் கலப்பை போட்டவர்கள் எல்லாம் விவசாயி கிடையாது. எந்த நிலத்தில் இறங்கி, அவர் விவசாயம் செய்தார்; போட்டாவுக்கு, 'போஸ்'தான் கொடுத்தார்.
இவரது தலைவர் ஸ்டாலின், வயலுக்குள் கம்பளம் விரித்து, விவசாயிகளை சந்தித்தது மட்டும், 'போஸ்' கொடுத்த சமாச்சாரம் இல்லையா?
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: மதுரையில் எந்த நிகழ்வு நடந்தாலும் வெற்றிதான்; ஆனால், அது தி.மு.க.,வுக்கு பொருந்தாது. 1976ல் தி.மு.க., பொதுக்குழு மதுரை யில் நடந்தது; அதன்பின் 12 ஆண்டுகளுக்கு தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லை. அதுபோல் தற்போதும் தி.மு.க., ஆட்சிக்கு வராது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.
பழனிசாமி தலைமையில அமையும் ஆட்சியில், 'புட் போர்டில்' தொங்கியாவது ஏறிடுவாங்க போலிருக்கே!
ராமதாஸ் அணியின் பா.ம.க.,பொருளாளர் சையத் மன்சூர் உசேன் பேச்சு: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களை இரண்டு முறை மத்திய அமைச்சராக்கினார். பின் படித்தவர், பண்புள்ளவர், ஆற்றல் மிக்கவர் என்பதாலும், ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக்கினார். ஒவ்வொரு திட்டங்களையும் ராமதாஸ் சொல்ல, அன்புமணி செயல்படுத்தினார்.
அப்பா, மகன்னு ரெண்டு பேரையும் பேலன்ஸ் பண்ணி பேசுறாரே... பிழைச்சுக்குவார்!