PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:கீழடி
அகழாய்வு குறித்து, மத்திய தொல்லியல் துறை மட்டுமல்ல; பல்வேறு அறிஞர்களும்,
பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆய்வு என்றால் ஆயிரம் கேள்விகள்
இருக்கும். 'கீழடி அகழாய்வு குறித்து, மத்திய தொல்லியல் துறை கேட்ட
அத்தனைக்கும் தரவுகள் கொடுத்து விட்டோம்' என, முதல்வர் கூறினால் அதை
ஏற்கலாம். எனவே, கீழடி விவகாரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்யாமல், அதை
ஆய்வாளர்களிடம் விட்டு விடுங்கள்.
கீழடி அகழாய்வு விவகாரத்தில், ரெண்டு கட்சியினரும் நல்லாவே அரசியல் பண்றாங்க!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேட்டி: தமிழகத்தில் உள்ள, 56 துறைகளிலும் நிர்வாக சீர்கேடு உள்ளது. இதில் முதன்மையாக, முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் உள்துறை மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில், 1.33 லட்சம் போலீசார் இருந்தும் குற்றங்களை தடுக்க முடியவில்லை. தன் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின், தோல்வியை ஒப்புக்கொண்டு தன் பதவியை ராஜினாமா செய்து, தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல்வர் கண்டிப்பா ராஜினாமா பண்ண மாட்டாரு... தப்பி தவறி பண்ணிட்டாலும், அதுவே அனுதாப ஓட்டுகளா மாறி, தி.மு.க., அணிக்கு பலமாகிடாதா?
பிரதமர் மோடிக்கு, தி.மு.க., -- எம்.பி., வில்சன் கடிதம்: மத்திய அரசானது, 'கீழடி தொடர்பான அறிவியல் ஆய்வுகளுக்கு நேரம் தேவைப்படுகிறது. ஆகவே, தாமதமாகிறது' என, தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அவர்களுக்கு பிடித்த பண்பாட்டு வரலாற்றுடன் ஒத்துப்போகும் பிற அகழாய்வு தளங்களுக்கு மட்டும் இந்த காலதாமதம் எங்கே போனது?
தமிழக சட்டசபை தேர்தல் நெருக்கத்தில், ஆய்வுகளை முடிச்சுக்கலாம்னு ஆற போட்டிருக்காங்களோ?
அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'ஊதிய உயர்வு, கொரோனா பேரிடரில் உயிரிழந்த டாக்டரின் மனைவிக்கு அரசு வேலை' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூரில் துவங்கிய டாக்டர்களின் நடைபயணத்திற்கு மக்களிடம் ஆதரவு பெருகுகிறது. சேலம் வாழப்பாடி அருகில் சில பெண்கள், 'நோயாளிகளை குணப்படுத்தும் டாக்டர்களையும், ஆட்சியாளர்கள் நடக்க வைத்து விட்டனரே' என, வேதனைப்பட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.
நோயாளிகள் எல்லாரிடமும், 'தினமும் வாக்கிங் போங்க'ன்னு சொல்ற டாக்டர்களையே நடையா நடக்க விட்டுட்டாங்களே!