PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:
தேசிய ஜனநாயக கூட்டணி
முழுமை பெற்று, அந்த கூட்டணியில் உள்ளவர்கள் என்னை பிரசாரத்துக்கு
அழைக்கும் பட்சத்தில், 2026 சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும்
போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
அப்படியா...
'தினகரன் பிரசாரம் செய்து தான் ஜெயிக்கணும்னா, அந்த வெற்றியே எங்களுக்கு
வேண்டாம்'னு அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி திட்டவட்டமா
மறுத்துடுவாரு!
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை:
'மக்களிடம் மனுக்களை பெற, பல பெயர்களை சூட்டி, தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றுகிறது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார். மாவட்டங்களில், திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதம் தோறும் மனுநீதி நாள், விவசாயிகள், மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், 'அம்மா' திட்ட குறை தீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள், முதல்வரின் தனிப்பிரிவு, 'அம்மா கால் சென்டர்' என, நாள்தோறும் பல பெயர்களை சூட்டிய, விளம்பர ஆட்சியை தான், அ.தி.மு.க., அப்போது நடத்தியது.
அது சரி... 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் பெட்டி வைத்து, இவங்க வாங்கிய மனுக்களின் நிலை என்ன?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு:
மக்களுக்காக, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை, இப்போதைய ஆளும், தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. பள்ளி மாணவர்களுக்கு காலணி முதல் கம்ப்யூட்டர் வரை கொடுத்த ஒரே முதல்வர், ஜெ., தான். 2026ல் வெற்றி பெற்று மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம்.
'தமிழக அரசின் கடன் தொகையை எங்க பங்குக்கும் ஏத்துவோம்'னு சொல்லாம சொல்றாரோ?
தமிழக, காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேட்டி:
காமராஜர் ஆட்சி என்பது எங்கள் கனவு. அதை நிறைவேற்ற நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எப்போதும் அதை கிடப்பில் போட முடியாது. காமராஜரின் நல்லாட்சியை யார் வழங்கினாலும், அவர்களை நாங்கள் ஆதரிப்போம். அதே நேரத்தில், காங்., கட்சியின் கனவான, எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, கட்சியை கட்டமைத்து வருகிறோம்; அதற்கான பணிகள் தொடர்ந்து நீடிக்கும்.
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாறி, மாறி பல்லக்கு துாக்குறதை இவங்க எப்ப நிறுத்துறாங்களோ, அப்ப தான் காமராஜர் ஆட்சியை பத்தி யோசிக்கவே முடியும்!