PUBLISHED ON : ஜூன் 15, 2025 12:00 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு: லோக்சபா
தேர்தலின்போது, பிரதமர் மோடி தமிழகத்துக்கு எட்டு முறை வந்தார். அத்தனை
முறை வந்தும், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உள்துறை அமைச்சர் அமித்
ஷா மட்டும் வந்து என்ன செய்ய போகிறார்? அவராலும் ஒன்றும் செய்ய முடியாது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை போல்,
சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு மக்கள் பணிகளில் நம்
கட்சியினர் தீவிரம் காட்ட வேண்டும்.
கடந்த நாலரை வருஷமா மக்கள் பணியில் அக்கறை காட்டாத கட்சியினர், இனிமே மட்டும் துள்ளி பாய்ஞ்சிடுவாங்களா, என்ன?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: வங்கியில் நகைக்கடன், கல்விக்கடன் பெற்று, அதில் நிலுவை இருந்து, 'சிபில் ஸ்கோர்' மதிப்பெண்ணை கணக்கிட்டால், கடன் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். எனவே, வேளாண் தொழில் சம்பந்தமாக, விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை வாயிலாக கிடைக்க வேண்டிய விவசாய கடன்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்ப கடன் கொடுக்க சொல்றவர், தேர்தல் வர்றப்ப, அதை தள்ளுபடி பண்ணுங்கன்னும் கேட்பாரே!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: தமிழக மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் மத்திய பா.ஜ., அரசு செய்கிறது. கீழடியை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் மத்திய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரிகத்தை தேடுகிறது. ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என, சமஸ்கிருத பண்பாட்டை நிறுவ துடிக்கிறது. தமிழ், தமிழரின் தொன்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிப்போம்.
முன்னாடியாவது எம்.பி.,யா இருந்தாரு... பார்லிமென்ட்ல நாலு வார்த்தை பேசலாம்... இனி இப்படி பேட்டி, அறிக்கைன்னு ஆறுதல் பட்டுக்க வேண்டியது தான்!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு: கள் ஒரு உணவு என சொல்வதற்கு உண்டான, 'புரோட்டின், விட்டமின், மினரல்ஸ்' போன்ற எந்தவிதமான சத்துக்களும் அதில் இல்லை. கள் இறக்கும் போராட்டம் நடத்துவது; அதை பொது இடத்தில் குடித்து காட்டுவது அனைத்தும் சட்டவிரோதம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
டாக்டரான இவர் சொன்னா சரியாதான் இருக்கும்... அதனால, கள்ளும் வேண்டாம்... பிராந்தி, விஸ்கி, பீரும் வேண்டாம்னு ஓரங்கட்டுவதே சரி!