PUBLISHED ON : ஜூன் 14, 2025 12:00 AM

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி:
தமிழகத்தில்
கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தால், உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தி,
தவறு செய்தவர்கள் மீது போலீசாரின் வாயிலாக சிறப்பாக நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே,
தி.மு.க., ஆட்சியில் மட்டும்தான் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அதிகமாக
நடப்பதுபோல் கூறி, அவதுாறு பரப்பி வருகின்றன.
எதிர்க்கட்சிகள் வேலையே அதுதானே... குற்றங்களே நடக்காமல் தடுத்துட்டா, அவங்க ஏன் குறைசொல்லப் போறாங்க?
அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அறிக்கை:
பழனிசாமிக்காக,தங்கள் கட்சி மாநில தலைமையை மாற்றி, பழனிசாமிக்கு என்னதான் பா.ஜ., முட்டுக் கொடுத்தாலும், அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, ஒரு காலமும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதே உண்மை. பூனை தலைமையில் புலியும் தோற்று விடும். புலியின் தலைமையில், பூனைகளும் வென்று விடும் எனும் சாணக்கியன் பொன்மொழி போல், 2026 சட்டசபை தேர்தல் பழனிசாமிக்கு 11வது தோல்வியை பரிசாக்கி, பா.ஜ.,வுக்கும், பழனிசாமிக்கு பல்லக்கு துாக்கும் பலருக்கும் புரிய வைக்கத்தான் போகிறது.
'அரசியல் சாணக்கியர் அமித் ஷா உதவியால், ஆட்சியை பிடிச்சிடலாம்'னு அ.தி.மு.க.,வினர் அபார நம்பிக்கையுடன் இருக்காங்களே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில், அணுகுண்டு விழுந்ததை போல தி.மு.க., ஆட்சி அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சியில் இதுவரை, 7,000 கொலைகள் நடந்துள்ளன. 2021 -- 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி மிக மோசமான ஆட்சிக்காலம் என்பது மக்களின் நீங்கா நினைவாக அமையும்.
பதிலுக்கு, உங்களது கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் கொலை பட்டியலை, அவங்க எடுத்து விட்டுட போறாங்க!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
தி.மு.க., ஆட்சி துவக்கத்தில் இருந்தே, பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத் தராதது தான்.
இவர் துணை முதல்வராக இருந்த போது, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்துலயே, இந்த ஆட்சியில் தானே தண்டனை வாங்கிக் குடுத்திருக்காங்க!