Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: 'பெண்கள் தங்கும் அரசு விடுதிக்கு, இனி பெண் காவலர்கள் பணி அமர்த்தப்படுவர்' என, அமைச்சர் கீதாஜீவன் கூறியிருப்பது, தங்களுக்கு ஆளுமைத்திறன் இல்லை என்பதையே குறிக்கிறது. அரசு பள்ளிகளில் கூட, நிறைய பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. அங்கும் பெண் ஆசிரியர்களை மட்டும் பணி அமர்த்த முடியுமா? அப்படி என்றால், அனைத்து ஆண்களும் குற்றவாளிகளா?

மகளிர் விடுதிகள் பாதுகாப்பு குறித்து, அமைச்சர் கீதாஜீவன் இன்னும் ஆக்கப்பூர்வமா சிந்திக்கலாமே!

தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏதோ தமிழகத்தின் மீது படையெடுத்து கைப்பற்றுவது போல கூட்டணி ஆட்சி பற்றி பேசியிருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என, பா.ஜ.,வினர் தெரிவித்தனர். கடைசி நேரத்தில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோம் என்றனர்; அங்கும் வெற்றி கிடைக்கவில்லை. இப்படி வெற்றி கிடைக்காத பட்சத்தில், 'ஆட்சி அமைப்போம்' என, சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது.

அப்படி என்றால், '200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என, இவங்க பார்ட்னரான தி.மு.க., வினர் சொல்றதை மட்டும் எப்படி நம்புறாரு?

தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் பி.எஸ்.மாசிலாமணி அறிக்கை: 'கூட்டுறவு கடன் பெறுவோரின் சிபில் ஸ்கோர் மதிப்பெண் பார்த்து, தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்க வேண்டும்' என்ற உத்தரவை கூட்டுறவு பதிவாளர் பிறப்பித்துள்ளார். 'ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிதாக பிறப்பித்த ஒன்பது விதிகள், கூட்டுறவுத் துறையை கட்டுப்படுத்தாது' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். அவரது அறிவிப்புக்கு மாறாக, பதிவாளர் உத்தரவிட்டாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர்கள் இன்னைக்கு சொல்லிட்டு, நாளைக்கு வீட்டுக்கு போயிடுவாங்க... அதிகாரிகள் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டாமா?

தமிழக பா.ஜ., சமூக ஊடக பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி பேட்டி: ஒரு திரைப்படம் வெற்றி அடைவதற்கு கதையும், கதாநாயகனும் மிக அவசியம். அதுபோல் ஓர் கட்சியின் வெற்றிக்கு, அக்கட்சியின் கொள்கையும், அதை விசுவாசித்து, துாக்கி சுமக்கும் தளபதியும், சிறந்த தலைமையும் மிக மிக அவசியம். அவ்வழியில் எங்கள் வெற்றி நாயகரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் உத்வேகம், 2026ம் ஆண்டின் தமிழக அரசியல் மாற்றத்திற்கானதாக அமையும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

இவர் சொல்ற மாதிரி, அமித் ஷா கதாநாயகன் என்றால், பிரதமர் மோடி யாராம்?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us