PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அறிக்கை:ஐ.பி.எல்.,ஐ
வடிவமைத்த லலித் மோடி நாட்டை விட்டே ஓடி தலைமறைவாகிவிட்ட நிலையில், பல
லட்சம் கோடிகளை குவிக்க, பலவழி பணக்காரர்கள் கூடி நடத்துகிற, ஐ.பி.எல்.,
என்பது இந்தியன் பித்தலாட்ட, 'லீக்' தான். அவர்கள் பணம் பார்க்கின்றனர்;
வேடிக்கைக்கு அலையும் பரிதாப இளைஞர்கள், தங்கள் உயிரையே
கொடுத்திருக்கின்றனர்.
சில நுாறு பேர் பணம் பார்க்க, கோடிக்கணக்கான இளைஞர்களின் பல மணி நேர உழைப்பு, ஐ.பி.எல்., போட்டிகளால் வீணடிக்கப்படுதே!
சென்னை, மயிலாப்பூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு அறிக்கை: 'தொகுதி மறுசீரமைப்பு என்ற இன்னும் வராத ஒன்றை, புலி வருது, புலி வருது என பூச்சாண்டி காட்டும் வேலையை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். வருமுன் காப்பவன் தான் அறிவாளி; வந்தபின் ஏமாறுபவன் ஏமாளி.
இதே கூற்று, அண்ணா பல்கலை மாணவி, தாம்பரம் அரசு சேவை இல்ல மாணவி பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கும் பொருந்துமே... 'பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துட்டோம்'னு சொல்றதைவிட, அந்த குற்றங்களே நடக்காம தடுத்திருக்கலாமே!
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேச்சு: தி.மு.க.,வில் கருணாநிதிக்குப் பின் தமிழகத்திலும், டில்லியிலும் அதிக செல்வாக்கு பெற்றிருந்த அடுத்தக்கட்ட தலைவராக வைகோதான் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி, தன் குடும்ப அரசியலுக்காக, வைகோவை வெளியேற்றினார். ம.தி.மு.க.,வை துவக்கிய வைகோவும் மாற்று அரசியலுக்கு வழிவகுப்பார் என்றால், தன்னை நம்பி வந்தவர்களை அம்போ என விட்டுவிட்டு, அவரும் வாரிசு அரசியலில் ஒன்றிப்போய் கிடக்கிறார்.
தி.மு.க., - ம.தி.மு.க.,ன்னு மாறி மாறி பயணித்தும், உருப்படியா எந்த பதவியும் தேறாத விரக்தியில இப்படி பேசுறாரோ?
தமிழக பா.ஜ., செயலர் எஸ்.ஜி.சூர்யா பேட்டி: நக்சல் ஒழிப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகள் அதிரடியாக இருந்தன. நக்சல்கள் மீது என்கவுன்டர் நடவடிக்கை, அவர்களது தலைவர்களை ஒழித்து, கீழ்மட்ட நக்சல்களை முற்றிலுமாக முடக்குவது, ஆயுதங்கள் செல்லும் வழிகளை தடுப்பது என, அதிரடி ஆட்டமாக இருந்தது. இதன் பலனாக, நக்சல் இல்லாத இந்தியா என்ற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.
சர்தார் வல்லபபாய் படேலுக்கு பின், துணிச்சலான உள்துறை அமைச்சராக அமித் ஷா திகழ்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை!