PUBLISHED ON : ஜூன் 11, 2025 12:00 AM

நடிகர் விஜயின் த.வெ.க.,வில் இணைந்த, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., டேவிட் செல்வின் பேட்டி:விஜய்
அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர்
அரசியலுக்கு வந்ததால் நன்றாக இருக்கும் என்பதால் த.வெ.க.,வில்
இணைந்துள்ளேன். ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு த.வெ.க., உருவெடுக்கும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து ஓட்டு விஜய்க்கு உள்ளது. எம்.ஜி.ஆர்., --
ஜெ.,க்கு பின், 'மாஸ் லீடர்' ஆக விஜய் உருவெடுத்துள்ளார்.
அப்ப உங்களை எம்.எல்.ஏ.,வாக்கி அழகு பார்த்த தி.மு.க.,வில் கருணாநிதி, ஸ்டாலின் போன்ற தலைவர்கள் எல்லாம், 'மாஸ் லீடர்' இல்லையா?
தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி: தொகுதி மறுசீரமைப்பை பா.ஜ., திட்டமிட்டது போல் கொண்டு வந்தால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்; வட மாநிலங்களே ஆட்சியை தீர்மானிக்கும். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு இது புரியவில்லை; தெரியவில்லை. தொகுதி மறுசீரமைப்பால், தமிழகத்திற்கான லோக்சபா பிரதிநிதித்துவம் குறையும். தமிழ் மண்ணில் பா.ஜ.,விற்கும், ஆர்.எஸ்.எஸ்.,சிற்கும் ஒருபோதும் இடம் கிடையாது. தமிழகத்தின் உரிமையை கேட்பது, மத்திய அரசுடன் சண்டை போடுவது அல்ல.
தி.மு.க.,வே சில விஷயங்களில், மத்திய அரசுடன் ஒத்துப்போகும் இந்த நேரத்தில், ஏன் இந்த கொசுக்கடி?
மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, 'சியாம்' தலைவர் ஷைலேஷ் சந்திரா பேட்டி: இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான வாகனங்களின் ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நேரத்தில், மூன்று விதமான கொள்கை வகுப்பதில், மத்திய அரசு கவனம் செலுத்துவது அவசியம். முதலாவதாக, ஒரிஜினல் வாகன உபகரண உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். இரண்டாவதாக, பதிவு செய்யப்பட்ட வாகன உடைப்பு மையத்தில் வாகனங்களை உடைப்பதை ஊக்குவிக்க வேண்டும். மூன்றாவதாக, நாடு முழுதும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த வேண்டும்.
கேட்க நல்லா தான் இருக்கு. செயல்படுத்த அரசு முழு முனைப்பு காட்டுமா?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமையும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதும், தி.மு.க., வினரின் அடிவயிற்றில் கிலியை உருவாக்கி உள்ளது. 'அ.தி.மு.க., -- பா.ம.க.,வை கபளீகரம் செய்து அந்த இடத்தில், பா.ஜ.,வை கொண்டு வருவது தான் அமித் ஷாவின் இலக்கு' என, தி.மு.க.,வினர் வாய் கூசாமல் பொய் சொல்கின்றனர். தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றுஉள்ளதால், தி.மு.க.,வுக்கு வட மாவட்டங்களில், 100 தொகுதிகளில் தோல்வி உறுதியாகி விட்டது.
நீங்க சொல்றதை கேட்டு, பா.ம.க., தொண்டர்களே விழுந்து விழுந்து சிரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!