PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை: 'நிடி
ஆயோக்' கூட்டத்தை வைத்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி
செய்யும் சேட்டைகள், சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை
காட்சிகளாக
உள்ளன. தமிழக அரசு மட்டுமல்ல, தமிழக மக்களும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
நிடி ஆயோக் கூட்டத்தை வைத்து, அதிகம் ஸ்கோர் செய்வது யார் என, எதிர்க்கட்சி
களுக்குள் போட்டா போட்டி நடக்கிறது.
அதே
மாதிரி, 'மூணு வருஷமா நிடி ஆயோக் கூட்டத்துக்கு போகாத முதல்வர், இந்த
வருஷம் மட்டும் ஏன் போனார்' என்ற கேள்விக்கு தி.மு.க., தரப்பு தர்ற
விளக்கம், அதைவிட அதிக சிரிப்பை வரவழைக்குதே!
தமிழக பா.ஜ., தலைவர்நயினார் நாகேந்திரன் அறிக்கை: 'மோடிக்கும் பயமில்லை, ஈ.டி.,-க்கும் பயமில்லை' என்று வழக்கம் போல எதுகை மோனையில், வீரவசனம் பேசிவிட்டு தப்பி விடலாம் என, துணை முதல்வர் உதயநிதி நினைக்கிறார். தவறு ஏதும் செய்யவில்லை, வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக உதயநிதியின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர் என்பதற்கு, அவர் விளக்கம் கொடுப்பாரா?
அந்த இருவரும் தனக்கு வேண்டியவங்க இல்லை என்றுகூட உதயநிதி இதுவரை விளக்கம் தரலையே!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி: 'மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதியளிப்போம்' என்பது, இந்தியாவுக்கே தலைகுனிவு ஏற்படும் வகையில் உள்ளது. இந்த வகையில் மக்களையும், மாணவர்களையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது. கல்வியில், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.நம்முடைய வரிகள் தான் மத்திய அரசின் நிதியாக உள்ளது. எனவே, நமக்குரியபங்கை மத்திய அரசுதர மறுப்பது மோசமான செயலாகும்.
அதான், முதல்வர் டில்லி போயிட்டு வந்திருக்காரே... 'நிதி வந்து சேரும்'னு தி.மு.க.,வினர் நம்புறது போல நீங்களும் நம்புங்க!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேட்டி: மக்களின் ஆதரவு, குறிப்பாக பெண்களுடைய ஆதரவு தமிழக முதல்வருக்கு இருக்கிறது. வரும்சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும்; முதல்வராக ஸ்டாலின் தொடர்வார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக, நிடி ஆயோக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டதை அ.தி.மு.க.,வினர் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். முதல்வர் எப்போதும் நேருக்கு நேராகத்தான் பேசுவார்.
இவர் சொல்றதும் சரிதானே... பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து தானே முதல்வர் ஸ்டாலின் பேசிட்டு வந்திருக்காரு!