PUBLISHED ON : மே 30, 2025 12:00 AM

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேட்டி: சட்டசபையில் நேரடி
ஒளிபரப்பு தொடர்பாக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது எந்தெந்த
கேள்விகள் ஒளிபரப்பு செய்ய வேண்டுமோ, அதை நேரடியாக ஒளிபரப்பு செய்து
வருகிறோம். மீதமுள்ள செயல்பாடுகளை எப்படி நேரலை செய்யலாம் என ஆலோசனை
செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக நேரலை செய்ய பணிகள் நடக்கிறது. அரசியல்
தொடர்பான கருத்துகளை பேசிவிடக் கூடாது என்பதற்காக, உன்னிப்பாக அந்த
விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது.
இப்பவும், ஆளுங்கட்சியினர் பேசுவதை தானே அதிகம் காட்டுறீங்க... எதிர்க்கட்சியினர் பேசுவது மக்களுக்கு எங்க தெரியுது?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையால் போடப்பட்ட, டாஸ்மாக் வழக்குகளுக்காக சமரசம் செய்ய வேண்டிய அவசியம், தங்களுக்கு இல்லை' என முதல்வர் கூறினாலும், சமீபத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்குப் பிறகுதான், டில்லி சந்திப்பு ஒருவேளை சரண்டருக்கானதா என்ற சந்தேகம் எழுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த மற்ற தவறுக்கு எல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு சோதனை நடத்திய தமிழக அரசு, டாஸ்மாக் முறைகேட்டை மட்டும் கண்டுக்காம இருந்தது ஏன்?
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி: தி.மு.க., ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இந்த நான்கு ஆண்டுகளில், பட்டியலின மக்கள் பல்வேறு நிலைகளிலே பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு முன் 10 ஆண்டுகளாக நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஜாதி வெறியாட்டங்கள், ஜாதி வன்கொடுமைகள் நடந்தது இல்லை. தி.மு.க.,வில் உள்ள அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள்., ஜாதி மோதலுக்கு, தீண்டாமைக்கு, வன்கொடுமைக்கு ஆதரவாக உள்ளனர்.
திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் போட்டு பேசிய, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், பட்டியலின மக்களை நிற்க வச்சே பேசிய, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எல்லாம் இன்னும் இவர் மறக்கலையோ?
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலர் திவ்யா சத்யராஜ் அறிக்கை: மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தவுடன் ஒருவர் மருத்துவராக முடியாது. அனுபவம் இல்லாத டாக்டரிடம் செல்வது ஆபத்து. அதுபோல், அரசியலுக்கு வந்தவுடன் ஒருவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது. அனுபவம் இல்லாமல் முதல்வர் ஆவோரிடம் மக்கள் தேவைகள் பற்றிய புரிதல் இருக்காது.
'அரசியலுக்கு இப்பதான் வந்திருக் கிற நான், சீக்கிரமே முதல்வர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன்... அதுக்கு இன்னும் காலம் இருக்கு'ன்னு சொல்றாங்களோ?